திருச்சியில் 10-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சி உறையூரில், சாலை ரோடு பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
திருச்சியில் 10-ஆம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்சி உறையூரில், சாலை ரோடு பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு  ஒன்று வரலாற்றுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்று துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலா ஆகியோர், இதுவரை படியெடுக்கப்படாத முற்சோழர் காலக் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
அதனை ஆராய்ந்த டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் கூறியது: 
கோயில் முக மண்டபத்தின் தென்புறச்சுவரில் காணப்படும் இக்கல்வெட்டு, தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் பதிவாகியுள்ள கல்துண்டுகள் மிகவும் சிதைந்திருப்பதால் கல்வெட்டை மசிப்படி எடுக்க முடியவில்லை. பொ.கா. 911-இல், முதல் பராந்தக சோழரின் நான்காம் ஆட்சியாண்டின் போது பதிவாகியுள்ள இக்கல்வெட்டு, கொடும்பாளூர் வேளிர்குல அரசர் தென்னவன் இளங்கோவேளாரான, தேவியருள் ஒருவரான அனயதஞ்சயதிரமதியார் சார்பாக இக்கோயில் இறைவனுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது.
கோயிலாரிடம் 38 கழஞ்சுப் பொன் அளித்த இவ்வம்மை, அதனை முதலாகக் கொண்டு அதன் வழி பெறப்படும் வட்டியால் கோயிலில் சிலஅறச்செயல்களை மேற்கொள்ளச் செய்தார். அக்காலத்தே இப்பகுதியில் ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு வட்டியாக ஒரு கலம் நெல், "நாலாயிரவன்' என்னும் பெயரில் வழங்கிய முகத்தலளவையால் (மரக்கால்) அளக்கப்பட்டு வழங்கப்பட்டது. இவ்வாறு 38 கழஞ்சுப் பொன்னுக்கு வட்டியாக ஆண்டுதோறும் 38 கலம் நெல் கோயிலுக்குக் கிடைத்துள்ளது. 
இதில், 10 கலம் நெல், கோயிலருகே இருந்த திருமஞ்சனக் குளத்தை ஆண்டுதோறும் தூரெடுத்துப் பராமரிக்கத் தரப்பட்டது. இக்குளத்திலிருந்து எடுக்கப்படும் நீரே இறைவனின் திருமுழுக்காட்டிற்கும், கோயில் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. எஞ்சிய 28 கலம் நெல் ஆண்டுதோறும் நிகழும், மகரசங்கராந்திகளின்போது கோயில் இறைவனுக்கு நெய்யால் முழுக்காட்டுச் செய்து சிறப்புப் படையலிடவும், அப்போது விளக்குகள் ஏற்றவும் ஆகும் செலவினங்களுக்கென வழங்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் சிதைவு காரணமாகப் படையலாக அளிக்கப்பட்ட பொருள்களைப் பற்றி அறிய 
முடியவில்லை. 
இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ள தென்னவன் இளங்கோவேளாரின் கல்வெட்டுகள், திருச்சி மாவட்டத்தில் ஜீயபுரத்திற்கு அருகே உள்ள திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் காணப்படுகிறது. அக்கோயிலைக் கற்றளியாக மாற்றிய பூதிஆதித்த பிடாரி, இம்மன்னரின் மகள். முதல் பராந்தக சோழரின் மகனான அரிஞ்சயன் இப்பெண்ணையே திருமணம் செய்திருந்தார். தென்னவன் இளங்கோவேளாரின் மற்றொரு தேவியான நங்கை கற்றளிப் பிராட்டி, திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் கோயில் இறைவனுக்கும், மற்றொரு தேவியான நக்கன் விக்கிரமகேசரியார் திருச்செந்துறை இறைவனுக்கும் கொடைகள் வழங்கியுள்ளது குறித்து ஏற்கெனவே படியெடுக்கப்பட்ட  கல்வெட்டுகளால் தெரியவந்துள்ளது 
என்கிறார் அவர் .
இக்கோயில் வளாகத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே மைய ஆய்வர்கள் புதிய கல்வெட்டுகள் சிலவற்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் குறிப்பிடும் 
மு. நளினி, திருச்சி  மாவட்டத்தின் வயலூர், அந்தநல்லூர், அல்லூர், பழுவூர், திருப்பராய்த்துறை, திருச்செந்துறை ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களில் கொடும்பாளூர் வேளிர் மரபைச் சேர்ந்த பல அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுவதாகவும், திருச்சி மாவட்டத்தில் வேளிர் அரசர்களின் ஆதிக்கம் சோழராட்சியின் தொடக்கக் காலத்தில்  இருந்ததை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கிறார். 
கோயில் அறங்காவலர் சித்ரா கருணாகரன், அலுவலர் மணி ஆகியோரின் துணையுடன் கண்டறியப்பட்ட இப் புதிய கண்டுபிடிப்பு பற்றிய தகவல், மத்திய அரசின்  கல்வெட்டுத் துறைக்கும், தமிழக அரசின்  தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com