தெற்கு ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினர்  தேர்வுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்

தெற்கு ரயில்வேயில் கடைநிலை பிரிவில் நிரந்தர பணியாளர்களுக்கு பதிலாக முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு


திருச்சி: தெற்கு ரயில்வேயில் கடைநிலை பிரிவில் நிரந்தர பணியாளர்களுக்கு பதிலாக முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்திருப்பது தவறான நடவடிக்கை என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.  

ரயில்வே பொறியியல் துறையில் தண்டவாள பராமரிப்பு, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட இயக்கப்பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு 2393 முன்னாள் ராணுவத்தினரை ரயில்வே வாரியம் தற்போது தேர்வு செய்துள்ளது. 

இவர்களுக்கான சான்றுகள் சரிபார்க்கும் பணி கடந்த செப்.20 முதல் அக்.16 ஆம் தேதி வரை ரயில்வே தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்திய அளவில் ஒரு மண்டல ரயில்வேயில் அதிகமான ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்வது இதுவே முதல்முறையாக உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.22,072 முதல் ரூ.24,660 வரை மாத ஊதியமும், சீருடைப்படி, இலவச பயண பாஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

தொழிற்சங்கம் கண்டனம்: முன்னாள் ராணுவத்தினரை தேர்வு செய்திருப்பதால், ரயில்வேயில் கடை நிலை பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டு வந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு பறிக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) துணைப்பொதுச்செயலர் மனோகரன் கூறியதாவது: தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தினர் தொடர்ந்து 15 முதல் 25 ஆண்டுகள் வரை ரயில்வே கடைநிலை பிரிவுகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இதனால், நிரந்தர பணியாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத சூழலில் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது கேள்விக்குறியாகிவிடும். 

மேலும், வரும் காலங்களில் கடைநிலை பிரிவுகளில் நிரந்த நியமனம் செய்யப்படுவது குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு படித்த, திறமையான இளைஞர்களே தேவையாக உள்ளது. எனவே, நிரந்தர பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com