Enable Javscript for better performance
கீழடி ஆய்வில் தமிழர்களின் சமயம் வெளிவர வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

  
  Prof

  முனைவா் க. நெடுஞ்செழியன்

  கீழடி ஆய்வில் தமிழர்களின் சமயம்  வெளிவர வாய்ப்புள்ளது என்றார்  உலகத்தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் க.நெடுஞ்செழியன்.

  திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறக்கட்டளைச் சொற்பொழிவுகளில் பங்கேற்று,  சங்க காலத் தமிழர் சமயம் என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது: தமிழரின் தொடக்க காலங்களில் நம்பிக்கைகளோடு கூடிய கருத்தியல் வழிபாட்டை பின்பற்றினர். இதில், குறியீடுகளும், அடையாளங்களும் நிறைய இருந்தன. கணவன்-மனைவி எனும் வாழ்வியல் கோட்டுபாடுகளுக்கு முந்தைய காலங்களில் பெண்ணின் ஆளுமையே மேலோங்கி இருந்தது. தமிழர் வரலாற்றின் தொடக்க காலங்களில் தாய்வழிச் சமூகமே ஆட்சிப்புரிந்தது.

   இல்லாள் எனும் ஆளுமையின் மறுவுறுவாக பெண்கள் இருந்தனர்.  இதற்கு எதிர்பதமாக ஆண் குறிப்பிடவில்லை.  மனைவி எனும் சொல்லுக்கு மனைக்கு உரியவள். சமூகத்தை, இல்லறத்தை வழிநடத்தியவள் பெண். இந்த சமய கோட்பாடே கொற்றவை வழிபாடு. இதன் நீட்சியாக இன்று வரை தாய்க்கு ஈமச்சடங்கை மூத்த மகன் செய்கிறார். தாய்வழி சமூகத்தின் ஆளுமையை மூத்த மகனுக்கே வழங்கப்பட்டு வந்தது. ஒருபோதும் கணவனுக்கு வழங்கப்படவில்லை. அதன் வழி தோற்றமே முருகவழிபாடு. தமிழர் நாகரிகத்தில் குமரி, தாய், முதியோள் ஆகிய மூன்று நிலைகளில் பெண்ணைத் தெய்வாக வழிபட்டனர். சுழல்குறி (ஸ்வஸ்திக்) எனும் கருத்தியல் மனித உயிர் சுழற்சியின் அடையாளமாக கருதப்பட்டது. அதன்பிறகே, சமயங்கள் வந்தன. புத்தர், மகாவீரர் ஆகியோர் வாழ்ந்த 6 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அய்யனார். இம்மூன்று பேரும் பௌத்தம், சமணம்,  ஆசிர்வகம் ஆகிய சமயத்தை தோற்றுவித்தனர். அதன்பிறகே, வைணவம், சைவ மதங்கள் வந்தன. சிலப்பதிகாரத்தில் கோவலன்-மாதவி-மணிமேகலை ஆகியோர் பௌத்த மதத்தையும், கண்ணகியின் வழிவகையினர் ஆசிர்வகத்தையும் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கிறது.

  லைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, திருப்பட்டூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆசிர்வகத்தினரின் சான்று உள்ளது. குறிப்பாக, "சோழ வர்ம தர்ம உள்நாளிகை" எனும் குறிப்பு ஸ்ரீரங்கம் கோயிலின் கருவறையில் எழுதப்பட்டிருந்தது. பிற்காலத்தில், சோழர்கள், பாண்டியர்கள் உள்ளிட்டோரால்  ஆசிர்வகத்தினரின் கோயில்கள் மறுசீரமைக்கப்பட்டது. அதில், ஆசிர்வகத்தினரின் குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 90 சதவிகித கோயில்களை கட்டியவர்கள் ஆசிர்வகத்தினர். ஆசிர்வகம் அறிவியல் தீர்வு கொண்ட கோட்பாடாகவும், மக்களுக்குத் தீர்வு தரக்கூடியதாகவும், செல்வாக்கு நிறைந்ததாகவும் இருந்தது. அவ்வகையில், தமிழர் மரபு சமய நம்பிக்கை கொண்ட மூல ஊற்றாக உள்ளது. எனவே, கீழடி ஆய்வில் கிமு 6-ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர் ஆய்வுகளில் தமிழர்கள் கடைபிடித்த சமயம் குறித்த விஷயங்கள் வெளிவரலாம் என்றார்.  

  முன்னதாக, "கண்ணதாசனின் இயேசு காவியத்தில் இறையுணர்வு" எனும் தலைப்பில் முனைவர் அ.ஆலிஸ், "புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வியல்" எனும் தலைப்பில் ரா.குறிஞ்சி வேந்தன் ஆகியோர் பேசினர். 

  இந்நிகழ்வுக்கு தூய வளனார் கல்லூரி முதல்வர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். முன்னாள் தமிழாய்வுத்துறை தலைவர் பி.செல்வக்குமரன் வரவேற்றார். தமிழாய்வுத்துறை தலைவர் இ. சூசை, பேராசிரியர் சி.பாக்கிய செல்வரதி முன்னிலை வகித்தனர். உதவிப்பேராசிரியர் ஆ.மரியதனபால் நன்றியுரையாற்றினார். உதவிப்பேராசிரியர் லா.சார்லஸ் ஒருங்கிணைத்தார்.  கல்லூரி அருள் தந்தையர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai