Enable Javscript for better performance
சமத்துவத்தை பிளவுபடுத்தும் எந்தவொரு சிந்தனையையும் அனுமதிக்கமாட்டோம்- Dinamani

சுடச்சுட

  

  சமத்துவத்தை பிளவுபடுத்தும் எந்தவொரு சிந்தனையையும் அனுமதிக்கமாட்டோம்

  By DIN  |   Published on : 29th September 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாட்டின் சமத்துவத்தை பிளவுப்படுத்தும் எந்தவொரு சிந்தனையையும் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்றார் முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவரும், எழுத்தாளருமான பொன்னீலன்.
  திருச்சி கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மொழி உரிமை மாநாட்டில்,  தமிழ்-இழப்பும், மீட்பும் எனும் தலைப்பில் அவர் மேலும் பேசியது: 
  தற்போதைய நிலையில் இந்தியா நெருக்கடியான சூழலில் சிக்கியுள்ளது.  வர்ணாசிரம தத்துவத்தை கொண்டுவர ஆட்சியாளர்களும், அதனைச் சார்ந்தோரும் துடிக்கின்றனர். மறுபுறம், நாட்டின் சமத்துவத்தை நிலைநிறுத்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   ஆயிரம் ஆண்டுகளாக வைதீக சிந்தனை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வைதீகத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், வைதீக சிந்தனையை நாடு முழுவதும் கொண்டுவருவதை கடுமையாக எதிர்க்கிறோம். மதச்சார்பற்ற நாட்டில் ஒரே நிலை எனும் சிந்தனையை கொண்டு வர துடிப்பது தேவையற்றது.  ஒன்றுபட்ட நாடாக இருக்கவே விரும்புகிறோம். வடமாநில பண்பாட்டை மதிக்கிறோம். ஆனால், தமிழக பண்பாட்டை ஆக்கிரப்பு செய்ய முயல்வதை எவ்வாறு ஏற்க முடியும். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் அதன் உரிமை, கலாசாரம், பண்பாடு, செல்வம் உள்ளிட்டவற்றில் நன்றாக வளர்ச்சி பெற முனைகிறது. இதனை தடுக்கும் விதமாக தற்போதைய ஆட்சிநிலை உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
   உலகத்தில் தமிழ்மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தொடர்ச்சியாக நடைமுறையில் இல்லை. இதனை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழமொழிக்கு எதிராக செயல்படுத்தும் சிந்தனையை விழிப்புணர்வோடு நின்று தடுத்து நிறுத்தி போராட வேண்டும். இதுவே தமிழர்களின் கடமையாக உள்ளது என்றார்.
  மாநாட்டில், தமிழைப் பயிற்று, ஆட்சி, வழக்காடு, வழிபாட்டு மொழியாக மாற்றி அறிவித்தல், கீழடியில் சர்வதேச அளவில் அருங்காட்சியகம் அமைத்தல், திருச்சியை தொல்பொருள் ஆய்வு மண்டல வட்டமாக மாற்றுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  மாநாட்டுக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தலைமைக்குழு உறுப்பினர் வீ.ந.சோ தலைமை வகித்தார். தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனும் தலைப்பில் புலவர் செந்தலை கவுதமன் மற்றும் அமுதன் அடிக ளார் உரையாற்றினர். 
  பெருமன்ற மாநகர் மாவட்டத் தலைவர் ம.செல்வராஜ் அறிமுகவுரையாற்றினார். 
  நிறைவாக, பொருளாளர் ராமராஜ் நன்றி தெரிவித்தார்.  தமிழ்ச் சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai