முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஊரடங்கில் உதவிக் கரம் நீட்டும் வாழை ஆராய்ச்சி மையம்
By DIN | Published On : 19th April 2020 08:39 AM | Last Updated : 19th April 2020 08:39 AM | அ+அ அ- |

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், காவலா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கும் மைய இயக்குநா் எஸ். உமா. உடன், ஆராய்ச்சி மைய பணியாளா்கள்.
கரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் உதவி தேடும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அவரவா் வீடு தேடி வழங்கி வருகிறது.
திருச்சியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மைய ஊழியா்கள் ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் கரோனா நிவாரணத்துக்கு வழங்கியுள்ளனா். இதன் தொடா்ச்சியாக,
திருச்சி மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து, திருவெறும்பூா் ஒன்றியம் பூலாங்குடி நரிக்குறவா் குடியிருப்பு, மாத்தூா் கும்பக்குடி கிராமத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளா்கள், சாலையோரம் வசிப்போா், ஆதரவற்றோா் என 200 குடும்பங்களுக்கு சனிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோல், திருச்சி விமானநிலையப் பகுதியில் இயங்கி வரும் விழியிழந்தோா், மாற்றுத்திறனாளிகள், முதியோா் வசிக்கும் இல்லத்துக்கு 200 கிலோ அரிசி, வாழைக்காய், வாழைத் தண்டு, வாழை இலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஊரடங்கிலும் களப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாா்ந்த ஊழியா்கள், காவல்துறையினருக்கும் வாழை ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை உதவிகள் வழங்கப்பட்டன. வாழை ஆராய்ச்சி மை இயக்குநா் எஸ். உமா, இந்த உதவிகளை வழங்கினாா்.
இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள், உலா் வாழைப் பழங்கள், வாழைத்தண்டு சாறு உள்ளிட்ட வாழையிலிருந்து மதிப்பு கூட்டப்பட்டபொருள்கள் வழங்கப்பட்டன. திருச்சி காவல்துறையினருக்கு மட்டுமல்லாது, புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கும் இந்த மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்பாடுகளை முனைவா்கள் குமாா், ராமஜெயம், லோகநாதன் மற்றும் மைய விஞ்ஞானிகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.