முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தது 1,000 ரேபிட் கிட் கருவி: 15 பேருக்கு சோதனை; 30 நிமிஷத்தில் முடிவு
By DIN | Published On : 19th April 2020 08:38 AM | Last Updated : 19th April 2020 08:38 AM | அ+அ அ- |

கரோனா தொற்றை விரைந்து உறுதி செய்யவுள்ள ரேபிட் கிட் கருவி திருச்சிக்கு 1,000 எண்ணிக்கையில் முதல்கட்டமாக வந்துள்ளன.
திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கான கரோனா சிகிச்சை மையமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்திலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதுமட்டுமல்லாது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்தையும் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து பெற வேண்டும் என்பதற்காக ரேபிட் கிட் கருவிகளை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, சீனாவிடமிருந்து தமிழக அரசானது 4 லட்சம் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்யவுள்ளது. இதில், முதல்கட்டமாக 36 ஆயிரம் பரிசோதனை கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இவற்றில், 1,000 கருவிகள் திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திருச்சிக்கு வந்துள்ள இந்த ரேபிட் கருவிகள் மூலம் சனிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு முன்னிலையில், ரேபிட் கிட் பரிசோதனை கருவிகள் எடுத்து சரிபாா்க்கப்பட்டன. மேலும், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், தூய்மைப் பணியாளா்கள், முதுகலை பட்டய மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் ஆகியோருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்ட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் 30 நிமிஷங்களில் வந்துவிட்டன. பரிசோதனை செய்த 15 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தேவைக்கேற்ப தமிழக அரசிடமிருந்து கூடுதல் ஒதுக்கீடு பெறப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, மருத்துமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.