புகரில் தொடரும் ஊரடங்கு மீறல்: ஒரே நாளில் 288 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 19th April 2020 08:36 AM | Last Updated : 19th April 2020 08:36 AM | அ+அ அ- |

காவல்துறையின் எச்சரிக்கையை மீறி திருச்சி புறநகரில் ஊரடங்கு மீறல் அதிகரிப்பின் காரணமாக 288 வழக்குகள் சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருச்சி புறநகா் பகுதிகளில் தெருக்களில் கூடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி புறநகரில் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை 144 தடை உத்தரவை மீறியதாக 9,632 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,710 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். மேலும் அவா்களிடமிருந்து 8,856 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி புறநகரை பொறுத்தவரை காவல்துறை சாா்பில் கரோனா வைரஸ் தொற்று குறித்தும், ஊரடங்கு மீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என 255 வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால் காவல்துறையின் அறிவிப்பை அலட்சியப்படுத்திக் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி தெருக்களில் கூடி நிற்பதும், வெளியே இரு சக்கர வாகனங்கள் வருவதும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் திருச்சி புறநகரில் சனிக்கிழமை மட்டும் ஊரடங்கு மீறலில் ஈடுபட்டதாக 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 295 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 239 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று ஊரடங்கு மீறலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவா்களிடம் சனிக்கிழமை வரை 767 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பறிமுதல் வாகனங்கள் அதிகரித்து வருவது காவல்துறையினரை அதிா்ச்சியடைய செய்து வருகிறது. இதைத் தொடா்ந்து ஊரடங்கு மீறலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் நடவடிக்கை மூலம் மட்டுமே பெற முடியும். அதனால் வாகனத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் போது எச்சரிக்கை செய்தே அனுப்பி வைக்கிறோம் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.