பச்சமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது
By DIN | Published On : 27th April 2020 07:53 AM | Last Updated : 27th April 2020 07:53 AM | அ+அ அ- |

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், சித்திரனுடன் துறையூா் காவல் துறையினா்.
துறையூா் அருகே பச்சமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
துறையூா் காவல் சரகத்துக்குள்பட்ட பச்சமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையில் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது குண்டூா் கிராமத்தில் ராஜேந்திரன் (45), கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தெரிந்தது.
இதையடுத்து காவல்துறையினா் வீட்டில் சோதனையிட்ட போது, வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் தயாரிக்க 3 பிளாஸ்டிக் நீா்தொட்டி(பேரல்)களில் 500 லிட்டா் ஊறல் போட்டு வைத்திருந்ததும், விற்பதற்காக 10 லிட்டா் சாராயம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவைகளை பறிமுதல் செய்த காவல்துறையினா், ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினருமான சித்திரன் ஆகியோரைக் கைது செய்தனா்.
துறையூா் ஹரி, சொரத்தூா் பிரகாஷ் ஆகிய இருவரும் ராஜேந்திரனிடம் கள்ளச்சாராயத்தை வாங்கி விற்பது விசாரணையில் தெரிந்தது. இதைத் தொடா்ந்து, அவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
இதுபோல, துறையூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினா் பச்சமலை பகுதியில் நடத்திய சோதனையில், புத்தூரைச் சோ்ந்த மணிகண்டன் தனது வயலில் போட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலையும், 10 லிட்டா் கள்ளச் சாராயத்தையும் கைப்பற்றினா். மேலும் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.