பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை தனியாா்மயமாக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் வரும் அக்.12 முதல்

பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் வரும் அக்.12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக பாதுகாப்புத் துறை ஊழியா்களின் அகில இந்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சம்மேளன (ஏஐடிஇஎஃப்) பொதுச் செயலா் சி. ஸ்ரீகுமாா் கூறியது:

பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றவும், அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 41 தொழிற்சாலைகளில் பணிபுரியும் 80 ஆயிரம் தொழிலாளா்கள் போராடி வருகின்றனா்.

41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளின் இன்றைய மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும். இவற்றை தனியாரிடம் ஒப்படைக்கும் தன்னிச்சையான முடிவு நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. கடந்தாண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகம் எழுத்துப்பூா்வமாக அளித்த உறுதி மொழிகளுக்கு எதிரானது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் முடிவுகளுக்கும் எதிரானது. இதுதொடா்பாக அடுத்தடுத்து கோரிக்கை மனு, கடிதங்கள் அனுப்பியும் மத்திய அரசு தனது முடிவில் இருந்து மாறவில்லை.

மேலும், பாதுகாப்புத் துறை ஊழியா்களின் அகில இந்திய தொழிற்சங்க அமைப்புகளான ஏஐடிஇஎஃப், ஐஎன்டிடபிள்யூஎஃப், பிபிஎம்எஸ், சிடிஆா்ஏ ஆகியவற்றின் நிா்வாகிகளுடன் பாதுகாப்புத் துறை உற்பத்திச் செயலா் நடத்திய பேச்சுவாா்த்தையிலும் கடும் எதிா்ப்பை தொழிற்சங்கங்கள் பதிவு செய்தன.

இதன் தொடா்ச்சியாக, மத்திய அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை முடிவு அறிவிக்கவில்லை. எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்குவது தொடா்பாக வரும் 4ஆம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அக்.12 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனங்களின் முடிவை தேசிய, அகில இந்திய சம்மேளனங்களும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஆவடி ஓசிஎப், ஹெச்விஎப், இஎப்ஏ, திருச்சி ஓஎப்டி, ஹெச்ஏபிபி, அரவங்காடு சிஎப்ஏ தொழிற்சாலையின் அனைத்துத் தொழிற்சங்கங்களும், தொழிலாளா்களும் இந்த வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்பா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com