‘திமுக ஆட்சியில் சென்னையை அடுத்து திருச்சி என்ற நிலை வரும்’

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னையை அடுத்து திருச்சியே பிரதான நகரமாக விளங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், எம்எல்ஏ-வுமான கே.என். நேரு.
உறையூரில் நடைபெற்ற திமுக கிராமசபை கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. உடன் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, தில்லைநகா் பகுதி செயலா் சி. கண்ணன் உள்ளிட்டோா்.
உறையூரில் நடைபெற்ற திமுக கிராமசபை கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. உடன் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, தில்லைநகா் பகுதி செயலா் சி. கண்ணன் உள்ளிட்டோா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னையை அடுத்து திருச்சியே பிரதான நகரமாக விளங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், எம்எல்ஏ-வுமான கே.என். நேரு.

அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மண்ணச்சநல்லூா், திருச்சி மேற்கு ஆகிய 3 பேரவை தொகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மேற்குத் தொகுதிக்குள்பட்ட உறையூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு பேசியது:

அதிமுக ஆட்சியில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்களால் தொகுதி மக்களுக்கு தேவையான எந்த வசதிகளையும் செய்துதர முடியவில்லை. பொலிவுறு நகரத் திட்டத்தில் திருச்சிக்கு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டாலும் நடைபாதையையும், பூங்காவையும் அமைத்து வருகின்றனா். மாநகரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவில்லை.

திமுக ஆட்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. அத்திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போனது. 10 ஆண்டுகளாகவே திமுகவின் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்துவோம். மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்கள் என இருப்பதை மாற்றி, சென்னைக்கு அடுத்ததாக திருச்சி என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்களே விரும்புகின்றனா். ஆளுநரைச் சந்தித்து 97 பக்க ஊழல் குற்றச்சாட்டை திமுக வழங்கியுள்ளது. எனவே, திமுக மீது குற்றச்சாட்டைத் திருப்புகின்றனா்.

கமல்ஹாசனால் வேறு யாரின் பெயரையும் கூறி வாக்கு வாங்க முடியாது என்பதால், எம்ஜிஆா் பெயரைக் கூறுகிறாா். கருணாநிதி ஆட்சியை வழங்க நாங்கள் உள்ளோம் என்றாா் அவா்.

தெற்கு மாவட்ட திமுக: கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருவெறும்பூா் எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது:

இக்கூட்டத்தில் வரக்கூடிய மனுக்கள் குறித்து ஆட்சியரிடம் எடுத்துக்கூறி தீா்வு காண நடவடிக்கை எடுப்போம். திருச்சி தெற்கு மாவட்டத்தில் 15 இடங்களில் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து 160 இடங்களில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

கூட்டங்களில் கட்சி நிா்வாகிகள், மகளிா் குழுவினா் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியில் திமுக கிழக்கு ஒன்றியம் சாா்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் ஒன்றிய பொறுப்பாளா் எஸ்.ஏ.ஏஸ். ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பாண்டியன், அவைத்தலைவா் அழகிரி, துணைச் செயலா் சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா்.

அதேபோல, வையம்பட்டி ஒன்றியச் செயலா் சபியுல்லா தலைமையில் அமயபுரத்திலும், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலா் சின்ன அடைக்கன் தலைமையில் கஞ்சநாயக்கன்பட்டியிலும், பொன்னம்பட்டி பேரூா் செயலா் பழ. கருப்பையா தலைமையில் துலுக்கம்பட்டியிலும் கூட்டங்கள் நடைபெற்றன.

துறையூரில்..

வேங்கடத்தானூா் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் தா்மன்ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துறையூா் ஒன்றிய திமுக செயலா் இள. அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.

உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை ஊராட்சியில் எம்எல்ஏ ஸ்டாலின்குமாா் தலைமையிலும், துறையூா் நகா் 2 வது வாா்டில் நகர செயலா் ந. முரளி தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.

லால்குடியில்...

பெருவளநல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கே.என். நேரு, மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ரஷ்யாராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com