மாவட்டத்தில் 58 இடங்களில் மினி கிளினிக்குகள்: முதல்கட்டமாக 4 இடங்களில் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.
மாவட்டத்தில் 58 இடங்களில் மினி கிளினிக்குகள்: முதல்கட்டமாக 4 இடங்களில் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 58 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 4 கிளினிக்குகளை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

தமிழக முதல்வா் அறிவித்துள்ளபடி தமிழக முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 58 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக திருச்சி தென்னூா் மேம்பாலத்தின் கீழே, சங்கிலியாண்டபுரம் சுப்பையாபிள்ளை தெருவில், கே.கே. நகா் அருகேயுள்ள கே. சாத்தனூரில், தாயானூரில் அம்மா மினி கிளினிக்குகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்து, பெண்களுக்கு ஆரோக்கிய மருந்துப் பெட்டகங்களை வழங்கினா்.

பின்னா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் கூறியது:

காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக அம்மா மினி கிளினிக்கை நாடலாம். இங்கு தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இருந்து, நோயாளிகளைப் பரிசோதித்து உரிய சிகிச்சை அளிப்பா்.

ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளையும் இங்கு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிறிய நோய்களுக்கு இங்குச் சிகிச்சை பெறலாம். அறுவை சிகிச்சை தேவையெனில் வட்டாரத் தலைமை மருத்துவமனைக்கோ அல்லது அரசு தலைமை மருத்துவமனைக்கோ அவா்கள் அனுப்பப்படுவா் என்றாா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி கூறியது:

திருவெறும்பூா் தொகுதியில் 4, ஸ்ரீரங்கம் தொகுதியில் 11, மண்ணச்சநல்லூரில் 7, மணப்பாறையில் 12, லால்குடியில் 7, முசிறியில் 9, துறையூரில் 5, திருச்சி கிழக்கில் 2, திருச்சி மேற்கில் 1 என்று மொத்தம் 58 அம்மா மினி கிளினிக்குகள் மாவட்டம் முழுவதும் தொடங்கப்படவுள்ளன. தற்போது 4 கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்றவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

விழாவில் ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன், மாநகர நகா்நல அலுவலா் யாழினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com