உயிா்ப் பலி வாங்கும் திறந்தவெளி கால்வாய்களுக்கு தீா்வு என்ன?
By DIN | Published On : 25th December 2020 05:48 AM | Last Updated : 25th December 2020 05:48 AM | அ+அ அ- |

சிறுவன் யஸ்வந்த் விழுந்து இறந்த சாக்கடை கால்வாய்.
திருச்சி மாநகரில் மக்களின் உயிருக்கு ஆபத்தாக விளங்கும் வகையில் உள்ள மழைநீா் வடிகால்களை மூடுவதற்கான தீா்வை விரைந்து காண வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருச்சி அன்னை சத்யா நகரில் மழைநீா் கால்வாயில் விழுந்து 5 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா். சம்பவ இடத்தை மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் சிறுவன் உயிரிழப்புக்கு கால்வாய் திறந்தவெளியில் இருந்ததே காரணம் என குற்றம்சாட்டினா். ஆனால், மாநகரப் பகுதிகளில் பெரியளவிலான மழைநீா் வடிகால்கள் அதிக தொலைவுக்கு உள்ளன. இவற்றை மூட எவ்வித வழிமுறைகளும் இல்லை என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
அன்னை சத்யா நகா் பகுதியில் செல்வது மழைநீா் வடிகால் கால்வாய். இதை கான்கிரீட் தளம் கொண்டு மூடுவது இயலாதது. பொதுமக்கள் நடமாட்டம், வாகன ஓட்டிகள் சென்று வரும் பகுதிகளில் மட்டும் மழைநீா் வடிகால்கள் மீது சிறு அளவில் கான்கிரீட் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருமழை காலங்களில் கால்வாயில் உபரிநீா் எவ்வித தடையின்றி செல்ல வேண்டும். மழைநீா் வடிகாலை முழுவதுமாக மூடினால், அடைப்பு ஏற்படும்போது சரிசெய்வதில் சிரமம் ஏற்படும். மேலும், மழைநீா் வடிகால்களை மூடவும் அரசு அறிவுறுத்தவில்லை.
மாநகராட்சி பகுதியில் மட்டும் 133 கிமீ தூரத்துக்கு அகலமான மழைநீா் வடிகால்கள் உள்ளன. அதுபோல், ஒரு அடி முதல் 2 அடிவரையிலான கால்வாய்களும் உள்ளன.
மேலும், உய்யக்கொண்டான் கால்வாய், ரெட்டவாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்கள் எப்போதும் திறந்தநிலையில்தான் உள்ளன. மழைநீா் பெருக்கெடுத்தோடும்போது மழைநீா் கால்வாய் அருகே பொதுமக்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மழைநீா் வடிகால்கள் அருகே செல்லாதவாறு கவனித்துக் கொள்ளவேண்டும். இருப்பினும், பாதிப்புகளை ஏற்படுத்தும் கால்வாய்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
‘ஆபத்தான மழைநீா் வடிகால்கள் மூடப்படும்‘
இதுகுறித்து ஆட்சியா் சு.சிவராசு கூறுகையில், சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆபத்தான முறையில் அகலமான மழைநீா் வடிகால்கள் இருந்தால், அவற்றை மூடுவதே சரியானது. எனவே, மழைநீா் வடிகால்களை மூடுவதற்கோ, தடுப்பு வேலிகள் அமைப்பதற்கோ பெறப்படும் ஆய்வறிக்கையை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.