முதல்வர் வேட்பாளர் குறித்து முரண்பாடு கிடையாது: வானதி சீனிவாசன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து முரண்பாடே கிடையாது என பாஜக-வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.
பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து முரண்பாடே கிடையாது என பாஜக-வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதை சர்ச்சை வளையத்தில் வைத்துள்ளனர். இதில், முரண்பாடே கிடையாது. தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவே தமிழக மண்ணில்தான் இதனை அண்மையில் அறிவித்தார். அதிமுக கட்சி தங்களது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. 

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. எனவேதான், முதல்வர் வேட்பாளரை பாஜக-வின் தேசிய தலைமை அறிவிக்கும் எனக் கூற வேண்டியுள்ளது. கூட்டணிக் கட்சிகளை அழைத்து பேசி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவித்தால் பாஜக-வின் தேசிய தலைமை அறிவிப்பை ஏற்று தமிழக பாஜக செயல்படும். முதலில் கூட்டம் நடத்த வேண்டும். முதல்வர் வேட்பாளர் என்பதை பெரிய பிரச்னையாக கருதவில்லை. சுமூகமாக இருக்கும்.அனைத்து கட்சிக்கும் ஆட்சி, அதிகாரம் என்பது லட்சியம். 

எனவேதான், வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று பேரவையில் இடம்பெறுவோம் என தமிழக பாஜக விரும்புகிறது. அதற்கேற்ப கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தொகுதி ஒதுக்கீட்டில் இடங்கள் கோரப்படும். தேர்தலில் வெற்றி பெற்று பாஜக எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அமைச்சர் பதவி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தலில் பாஜக-வுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதவீதம் மகளிருக்கு வழங்க கோரிக்கை விடுப்போம். அதற்கேற்ப பெண்களை தயார்படுத்துவதே பாஜக மகளிர் அணியின் முக்கிய பணியாகும். 

கடந்த தேர்தலில் வேளாண் சட்டங்களை கொண்டுவருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, இப்போது அதனை எதிர்த்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. திமுக தலைவர் மற்றும் அதன் முன்னணி நிர்வாகிகள், திமுக-வில் அமைச்சர் பதவி வகித்தவர்கள், திமுக நிர்வாகிகள் என அனைவருமே பல்வேறு தொழில்களை நடத்துகின்றனர். தொலைக்காட்சி, சினிமாத்துறை, மது தயாரிப்பு தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில்தான் முதலீடு செய்துள்ளனர். வேளாண்மைத்துறையில் திமுக இதுவரை செய்த முதலீடு என்ன?.

விவசாயிகள் சிலர் போராடுகின்றனர் என்பதால் அதனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறது திமுக என்றார் அவர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எந்த கூட்டணியும் நிரந்தரம் என்று யாராலும் சொல்ல முடியாது என பதில் அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com