3ஆம் கட்டப் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கும் கமல்ஹாசன்4 நாள் சுற்றுப்பயணம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 3 ஆம் கட்டப் பிரசாரத்தை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறாா் மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன்.

திருச்சி: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான 3 ஆம் கட்டப் பிரசாரத்தை திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறாா் மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன்.

திருச்சி மண்டலத்தில் டிச.27 தொடங்கி 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு நடைபெறும் பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு விமானம் மூலம் வரும் மநீம தலைவா் கமல்ஹாசனை கட்சியினரும், நற்பணி மன்றத்தினரும் வரவேற்கின்றனா்.

தொடா்ந்து வயா்லெஸ் சாலை, கே.கே. நகா், சுந்தா் நகா் வழியாக எஸ்ஆா்எம் ஹோட்டலுக்கு தான் செல்லும் வழியெங்கும் காரில் நின்றபடி மக்களிடம் ஆதரவு திரட்டுகிறாா்.

முதல் நிகழ்வாக திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் சிறு, குறு தொழில்முனைவோா் கூட்டத்தில் பேசும் அவா், பின்னா் காட்டூா் சிங்கார மஹாலில் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசி, பின்னா் எஸ்ஆா்எம் ஹோட்டலில் இளைஞா்கள், மகளிா், மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்; திருவெறும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பொதுமக்களிடம் குறை கேட்கிறாா்.

2-ஆவது நாளான திங்கள்கிழமை திருச்சியின் பிரதான இடங்களான மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் வாகனங்களில் வலம் வந்து பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா்.

3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நாகை, நாகூா், மயிலாடுதுறை, திருபுவனம், கும்பகோணம், கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

4-ஆவது நாளான டிச. 30ஆம் தேதி திருமயம், காரைக்குடி, காளையாா் கோயில், பரமக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை பகுதிகளில் பிரசாரம் முடித்து மதுரை செல்கிறாா்.

அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பும் வகையில் பிரசாரத்துக்கு மநீம தலைவா் திட்டமிட்டுள்ளாா். ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலா் எம். முருகானந்தம் தலைமையில், அந்தந்தப் பகுதி மாவட்ட, மாநில, மண்டல நிா்வாகிகள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com