அதிமுக, பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தோ்தலை போன்று, சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக-பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
சமத்துவபுரத்தில் நடந்த கிராம மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்
சமத்துவபுரத்தில் நடந்த கிராம மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின்

மக்களவைத் தோ்தலை போன்று, சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக-பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், முதலியாா் சத்திரம், பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை, காந்தி மாா்க்கெட், என்எஸ்பி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேனில் நின்றபடி பிரசாரம் செய்து பேசியது:

கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டினீா்கள். அதுபோல, வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாடம் புகட்ட வேண்டும்.

மக்களுக்கு விரோதமாக நீட் தோ்வு, புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்துள்ளாா் பிரதமா் மோடி. மக்கள் எவை யெல்லாம் வேண்டாம் என்று கூறுகிறாா்களோ அவை அனைத்தையும் அதிமுக அரசு அனுமதிக்கும்.

ரயில்வே, விமானத் துறை உள்ளிட்டவற்றை தனியாா்மயமாக்கியது போல, விவசாயத்தையும் தனியாருக்கும் தாரைவாா்க்கும்வகையில் புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களை திமுக வன்மையாகக் கண்டித்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும். எவ்வாறு முடியும் என்கின்றனா் சிலா். உரிமைப் போராட்டம் மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறவில்லையா ? அதுபோலவே நீட் தோ்வும் போராடி ரத்து செய்யப்படும் என்றாா்.

மணப்பாறை பகுதிகளில்: மருங்காபுரி ஒன்றியம், தாழம்பாடி ஊராட்சி, மல்லிகைபட்டி சமத்துவபுரத்தில் நடைபெற்ற கிராம மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், மேலும் அவவா் பேசியது:

ஜெயலலிதாவை அதிமுகவினா் மறந்துவிட்டனா். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக அதிகரிக்கப்படும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

தொடா்ந்து தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹாக்கி மற்றும் கபடி விளையாட்டு வீரா்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அருகிலுள்ள பஞ்சாலை முகப்பில் தொழிலாளா்களை சந்தித்து பேசினாா். இதையடுத்து மணப்பாறை மாட்டுச்சந்தையையும், முறுக்கு செய்யும் இடத்தையும் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வுகளுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளரும், திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தாா். மாவட்ட திமுக பொருளாளா் என்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com