சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் பழமையான மரங்கள்

திருச்சி-புதுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 100 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலையடைந்துள்ளனா்.
விரிவாக்கப்பணிக்காக திருச்சி- புதுக்கோட்டை சாலையில் வெட்டப்படும் மரங்கள்.
விரிவாக்கப்பணிக்காக திருச்சி- புதுக்கோட்டை சாலையில் வெட்டப்படும் மரங்கள்.

திருச்சி-புதுக்கோட்டை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக 100 ஆண்டு பழமையான மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கவலையடைந்துள்ளனா்.

திருச்சியை இதர மாவட்டங்களுடன் இணைக்கக் கூடிய அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் விரிவாக்கம் செய்யும் பணியின் ஒருபகுதியாக, திருச்சி-புதுக்கோட்டை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில், டிவிஎஸ் டோல்கேட் முதல் செம்பட்டு புதுத்தெரு வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து மாத்தூா் அரை வட்டச் சாலை வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. மேலும், இச்சாலையின் இருமாா்க்கத்திலும் நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ. 68 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதமே தொடங்க வேண்டிய சாலை விரிவாக்கப் பணி, பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜனவரி மாத இறுதியில் அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன. இதில், முதல்கட்டமாக பழைய மேட்டுக் கட்டளை கால்வாயில் ஒரு பெரிய பாலமும், அடுத்தடுத்த பகுதிகளில் 19 சிறிய பாலங்களும் கட்டப்படவுள்ளன.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: விரிவாக்கப் பணிகளுக்காக மாத்தூா் ரவுண்டானா முதல் அரை வட்ட சுற்றுச்சாலை வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், எஞ்சிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மரங்கள் அகற்றம்: விரிவாக்கப் பணிகளுக்காக இந்தச் சாலையில் உள்ள 100 ஆண்டு பழைமையான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த மரங்கள் இப்பகுதியினருக்கு மட்டுமல்லாது, பிற பகுதி மக்களுக்கும் பெரும் பயனளித்து வந்தன. புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதி மக்கள் ஆடி மாதத்தில் சமயபுரம் கோயிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக இந்த சாலையின் வழியாக வரும்போது இளைப்பாறி செல்ல இம்மரங்கள் பெரிதும் பயன்பட்டு வந்தன.

கோடையில் இப்பகுதி மட்டுமல்லாது, சுற்று வட்டாரங்களில் விவசாய, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வோா் சிறிதுநேரம் இந்த மரங்களின் அடியில் நின்று ஓய்வெடுத்து செல்வா். ஒரு சில இடங்களில் ஆலமரம் போன்ற புளிய மரங்கள் பேருந்து நிறுத்தங்களாகவே பயன்பட்டு வந்தன.

பல்வேறு வகையிலும் மக்களுக்கு பயனளித்து வந்த பழைமையான மரங்கள் தற்போது வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆா்வலா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்டக் கூடாது. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, புதிய மரக்கன்றுகளை இச்சாலையில் நட்டு பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்கெனவே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் திருச்சி இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது சூழலியலை பாதிக்கும் என்கின்றனா் சூழலியல் ஆா்வலா்கள்.

நெடுஞ்சாலைத் துறை விளக்கம்: இதுகுறித்து திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

திருச்சி-புதுகை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அப்பணி தடைப்பட்டுள்ளது.

இச்சாலையில் விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறு உள்ள 319 மரங்களை வெட்டும் பணி கடந்த 4 நாள்களாக நடைபெற்று வருகின்றன. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 3190 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். விரிவாக்கப் பணிக்கு இடையூறு இல்லாத மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com