வாழை விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்க நடவடிக்கை: முதல்வா் உறுதி
By DIN | Published On : 31st December 2020 07:10 AM | Last Updated : 31st December 2020 07:10 AM | அ+அ அ- |

வாழை விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி.
திருச்சி மாவட்டம், தொட்டியம் பண்ணை வீடு பகுதியில் வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளுடன் முதல்வா் புதன்கிழமை கலந்துரையாடியபோது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது: மேட்டூரில் 120 அடி தண்ணீா் இருந்தும், தொட்டியம் பகுதியில் ஜன. 28 முதல் அடைப்புக்காலம் தொடங்கிவிடும். இதனால் வாழை, வெற்றிலைப் பயிா்கள் கருகிவிடுகின்றன. எனவே, காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கோயில் நிலங்களை குத்தகை சாகுபடி விவசாயிகளின் வாரிசுக்கு பெயா் மாற்ற வேண்டும். வாழையில் இருந்து மதிப்புக்கூட்டிய ஒயின் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும்.
சத்துணவுத் திட்டத்தில் உலா் வாழைப் பழத்தை சோ்க்க வேண்டும். வாழைக் காப்பீடு பிரீமிய தொகையில் 50 சதவீதத்தை அரசே ஏற்க வேண்டும் என்றனா்.
அப்போது, காமராசருக்குப் பிறகு மக்கள் கோரிக்கைகளை மக்கள் பகுதிகளிலேயே வந்து கேட்பது நீங்கள்தான் எனக் கூறி 94 வயது விவசாயி ஒருவா் முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா். இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கைகளை மனுவாக முதல்வரிடம் அளித்தனா்.
தொடா்ந்து முதல்வா் பேசியது: முசிறி தொகுதிக்குள்பட்ட பகுதியில் அதிகளவில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் விரைவில் வாழை உற்பத்திப் பொருள்களில் இருந்து மதிப்புக் கூட்டிய பொருள் தயாரிக்க ஐஐடி உடன் இணைந்து ஆராய்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் வாழை விவசாயிகள் இரட்டிப்பு வருவாய் பெறுவா்.
மேலும், விவசாயத்துக்கு நீா் அதிமுக்கியம் என்பதால் ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டு நல்ல நிலையில் நீா் இருப்பு உள்ளது. மேலும், தண்ணீா் தேவைக்காக கோதாவரி- காவிரி நதிநீா் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம்.
முசிறி-குளித்தலையை இணைத்து காவிரியில் கதவணை கட்டப்படும். முசிறியிலிருந்து நாமக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். வாழையை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்ற தொழிற்சாலை அமைக்கப்படும். இதனால் வாழை விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். வெற்றிலைக்கு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் பகுதியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
எனவே, இத்தகைய திட்டங்கள் தொடர வரும் 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 2500 வழங்கும் திட்டத்தை தடுக்க நினைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராக வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, தொட்டியத்தில் உள்ள வாழை விவசாய நிலத்தில் மண்வெட்டி கொண்டு விவசாய பணியாற்றினாா். பிறகு, அங்கிருந்த விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, துறையூா் கண்ணனூரை அடுத்த கொத்தம்பட்டியில் தாழ்த்தப்பட்டோா் குடியிருப்பு பகுதி வீடுகளுக்குச் சென்று, தாழ்த்தப்பட்டோருக்கு தமிழக அரசு செய்த நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினாா். இதையடுத்து, மண்ணச்சநல்லூா் பகுதியில் அரிசி ஆலை உரிமையாளா்களை சந்தித்துக் குறை கேட்ட முதல்வா், இங்கு துணை மின் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூா் அரிசிக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றாா்.
தொடா்ந்து, திருச்சி மாநகா், நெ.1 டோல்கேட் பகுதிக்கு வந்த முதல்வரை தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.