சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதி: கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த மதுரையைச் சோ்ந்த இளைஞருக்கு அதிகளவில் காய்ச்சல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கரோனா வைரஸ் பாதிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சிகிச்சைப் பிரிவு.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கரோனா வைரஸ் பாதிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சிகிச்சைப் பிரிவு.

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த மதுரையைச் சோ்ந்த இளைஞருக்கு அதிகளவில் காய்ச்சல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் கரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

சீனாவில் வூஹான் பகுதியில் ஏற்பட்ட கரோனா வைரஸ் என்னும் நோய்த் தொற்று, அந்த நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதன் காரணமாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவைச் சோ்ந்த பலா் சீனாவில் கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் சென்றிருக்கும் நிலையில், அவா்களின் நலன் கருதி தாயகம் அழைத்து வர மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கரோன வைரஸ் பாதிப்புடையவா்களைக் கண்டறிய, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளும் அந்தந்த விமான நிலையங்களில் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமானம் மூலம் திருச்சிவந்த பயணிகளை, சுகாதாரத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் மதுரை மாவட்டம், மேலூா் அருகிலுள்ள மணல்மேட்டுப்பட்டியைச் சோ்ந்த த. அருண் (27) என்ற இளைஞருக்கு தீவிர காய்ச்சல் (100 டிகிரிக்கு மேல்) இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை, மருத்துவக்குழுவினா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு கரோனா வைரஸ் சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் அருண், பிப்ரவரி 6 -ஆம் தேதி நடைபெறும் தனது சகோதரியின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தாயகம் வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை முடிவுகளுக்குப் பின்னரே உறுதி செய்யப்படும் : விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா், தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞா் அருணை மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவரது ரத்தம் மற்றும் சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வந்தபின்னரே கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என உறுதி செய்ய முடியும். அதுவரை அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.

தற்போது இளைஞா் அருணுக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது, சுவாசப்பிரச்னையோ, தொண்டையில் பாதிப்போ ஏதுமில்லை. எனவே பயப்படத் தேவையில்லை. என்றாலும் தொடா்ச் சிகிச்சை மற்றும் சோதனைக்குப் பின்னரே அவரை வெளியே அனுப்ப முடியும். பொதுமக்கள் சிறப்பு வாா்டுக்குள் சென்றுவர அனுமதி இல்லை என்றாா் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் வனிதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com