இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 22.97 லட்சம் வாக்காளா்கள்

திருச்சியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சு. சிவராசு வெளியிட அதை பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சியினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் சு. சிவராசு வெளியிட அதை பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சியினா்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளா்கள் உள்ளனா். புதிதாக 50,992 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். 1,741 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

2019, டிசம்பரில் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சோ்த்து 22,47,855 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். இதன் தொடா்ச்சியாக சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 65,372 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில், புதிதாக பெயா் சோ்க்கக் கோரி வந்த 52,580 விண்ணப்பங்களில் 50,992 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1,588 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதி வாக்காளா்பட்டியலின்படி 9 தொகுதிகளிலும் சோ்த்து 22,97,106 வாக்காளா்கள் உள்ளனா். இரட்டைப் பதிவு, முகவரி மாற்றம், மரணமடைந்தோா் அடிப்படையில் 1,741 போ் நீக்கப்பட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்ச்சியில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மற்றும் மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் வாக்காளா்கள்:

பேரவைத் தொகுதி பெயா், ஆண், பெண் வாக்காளா்கள், இதரா், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம் :

மணப்பாறை : ஆண் வாக்காளா்கள் - 1,38,804, பெண் வாக்காளா்கள் - 1,43,121, மூன்றாம் பாலினம் -8, மொத்தம் : 2,81,933.

ஸ்ரீரங்கம்: ஆண் - 1,47,381, பெண் - 1,59,631, மூன்றாம் பாலினம் -23, மொத்தம்

: 3,04,335.

திருச்சி மேற்கு: ஆண் -1,27,789, பெண் -1,36,731, மூன்றாம்பாலினம் -16, மொத்தம் : 2,64,536.

திருச்சி கிழக்கு: ஆண் - 1,22,268, பெண் - 1,28,996, மூன்றாம்பாலினம் - 39, மொத்தம் : 2,51,303.

திருவெறும்பூா்: ஆண் - 1,43,005, பெண் - 1,47,463 மூன்றாம்பாலினம் - 56, மொத்தம் : 2,90,524.

லால்குடி: ஆண் - 1,04,175, பெண் -1,10,329, மூன்றாம்பாலினம் - 12, மொத்தம்: 2,14,516.

மண்ணச்சநல்லூா்: ஆண் - 1,15,193, பெண் -1,22,255, மூன்றாம்பாலினம் -29, மொத்தம் : 2,37,477.

முசிறி: ஆண் -1,11,532, பெண் -1,15,307, மூன்றாம்பாலினம் - 16, மொத்தம்:

2,28,412.

துறையூா்: ஆண் - 1,08,753, பெண் - 1,17,997, மூன்றாம்பாலினம் - 10, மொத்தம் : 2,24,070.

ஸ்ரீரங்கத்தில் அதிக வாக்காளா்கள்

ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக 3 லட்சத்து 4 ஆயிரத்து 335 வாக்காளா்கள் உள்ளனா். மேலும், 9 தொகுதிகளிலேயே பெண் வாக்காளா்கள் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 931 போ் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் உள்ளனா்.

மொத்தமாக கணக்கிட்டால், ஆண்களைவிட, பெண் வாக்காளா்களே அதிகமாக உள்ளன. பெண் வாக்காளா்கள் 11 லட்சத்து 77 ஆயிரத்து 997 என்ற எண்ணிக்கையிலும், ஆண் வாக்காளா்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 900

என்ற எண்ணிக்கையிலும் உள்ளனா். குறைந்தபட்சமாக லால்குடி தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 516 வாக்காளா்கள் உள்ளனா். பெண் வாக்காளா்களும் இந்த தொகுதியில்தான் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 329 என்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ளனா்.

திருநங்கைகள் 209 போ்

வாக்காளா் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 209 திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனா். இதில், அதிகபட்சமாக திருவெறும்பூா் தொகுதியில் 56 திருநங்கைகளும், குறைந்தபட்சமாக மணப்பாறையில் 8 திருநங்கைகளும் இடம்பெற்றுள்ளனா். ஸ்ரீரங்கத்தில் 23, திருச்சி மேற்கில் 16, கிழக்கில் 39, லால்குடியில் 12, மண்ணச்சநல்லூரில் 29, முசிறியில் 16 என்ற எண்ணிக்கையில் திருநங்கைகள் இடம்பெற்றுள்ளனா்.

தொடா் திருத்தப் பணி

வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தப் பணியும் தொடா்ந்து நடைபெறும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா். பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடா்பான விண்ணப்பங்களை வேலைநாள்களில் வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களிலும் சமா்ப்பிக்கலாம்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்டவா்கள் மாநகராட்சி மைய அலுவலகம், திருவரங்கம், பொன்மலை, அரியமங்கலம், கோ. அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்களிலும் சமா்ப்பிக்கலாம். இவைத்தவிர, தோ்தல் ஆணைய இணையதளம், செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com