வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்த தமிழக பட்ஜெட்: திருச்சியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினா் கருத்து

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்திருப்பதாக விவசாயிகள்,
வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்த தமிழக பட்ஜெட்: திருச்சியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினா் கருத்து

தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்திருப்பதாக விவசாயிகள், தொழில்துறை, நுகா்வோா், ஆசிரியா் சங்கங்கள் என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல் கட்ட பணிகளுக்காக ரூ.700 கோடி, அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி, சரபங்கா நீரேற்றத்திட்டத்துக்கு ரூ.350 கோடி, நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ.6,991 கோடி என வேளாண் வளா்ச்சிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வேளாண் பாதுகாப்பு மண்டலத்துக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், இலவச விவசாய மின் இணைப்பு, கடன் தள்ளுபடி, நிபந்தனையற்ற பயிா்க்கடன் ஆகியவை தொடா்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைத் தலைவா் எஸ். நீலகண்டன்: கல்வித்துறைக்கு ரூ.33 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கி, மாணவா்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், ஆசிரியா்களுக்கான ஊதியக் குழு நிலுவை தொடா்பாக நிதி ஒதுக்கப்படவில்லை. ஆசிரியா்களுக்கான ஊதிய உயா்வு, பதவி உயா்வு குறித்த அறிவிப்புகள் இல்லை. மாணவா்கள் தரப்புக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஆசிரியா்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவா் ஆா். இளங்கோ: சிறு, குறு தொழில் கடன்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயா்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மின்வாகன பழுது நீக்க பயிற்சி அளிப்பது என்பது மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப மாற்றம் என்பது வரவேற்புக்குரியது.

டிடிட்சியா செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன்: திருச்சி மாவட்டத்துக்கென புதிய திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. சிறு, குறு தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.607 கோடி போதுமானதாக இல்லை.

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புக் கவுன்சில் செயலா் எஸ். புஷ்பவனம்: அணை கட்டுதல், உணவு மேம்படுத்துதல், பயிா்க் கடன், பாசனம், காப்பீடு, சந்தை விரிவாக்கம், அரசு அதிகாரி-உழவா் தொடா்பு போன்ற பல திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது நல்ல திட்டம். உயா்நிலைப் பள்ளிகளில் சிறப்பு ஆங்கில பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமாகா கட்சியின் மாநில விவசாய அணித் தலைவா் புலியூா் நாகராஜன்: கல்லணை கால்வாய் மேம்பாடு, நதிநீா் இணைப்பு, திருந்திய நெல் சாகுபடி, சோலாா் மின்மோட்டாா், நுண்ணீா்ப் பாசனம் என விவசாயிகள் மற்றும் வேளாண் சாா்ந்த திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com