மாவட்டத்தில் 1.04 லட்சம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம்
By DIN | Published On : 17th February 2020 01:56 AM | Last Updated : 17th February 2020 01:56 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் ஓய்வூதியத் திட்டங்களின் மூலம் 1.04 லட்சம் பேருக்கு தலா ரூ.1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திராகாந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்,41,067 முதியோா்களுக்கு ரூ.146.60 கோடி மதிப்பில் ஓய்வூதியமும்,இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 27,111 விதவைத் தாய்மாா்களுக்கு ரூ.95.51 கோடியில் ஓய்வூதியமும், இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1273 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4.34 கோடி ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 16,202 ஆதரவற்ற விதவைத் தாய்மாா்களுக்கு ரூ. 56.52 கோடியும், கணவரால் கைவிடப்பட்ட 2,037 ஆதரவற்றவோருக்கு ரூ. 7.15 கோடியும், 13, 484 ஆதவரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 43.37 கோடியும், 50 வயதைக்
கடந்து திருமணமாகாத 1619 ஏழை மகளிருக்கு ரூ. 5.33 கோடியும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோா் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் 1,240 விவசாயிகளுக்கு ரூ. 4.9 கோடி நிதியுதவியும், மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 1,000 மும் வழங்கப்படுகின்றன.
இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 237 இலங்கை அகதிகளுக்கு ரூ. 89 லட்சம் மதிப்பில், முதியோா், ஆதரவற்ற விதவை, ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 25 திருநங்கைகளுக்கு ரூ. 9 லட்சம் நிதியும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 29, 046 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 6.95 கோடியும், 150 உறுப்பினா்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 12.36 லட்சமும் , 4368 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 3. 71 கோடியும் , 4, 802 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ. 8.87 கோடியும், 102 பேருக்கு விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக ரூ. 1.02 கோடியும், 1492 பேருக்கு தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1000 வீதம் ரூ. 6.18 கோடியும் குழந்தைகளுக்கான உதவித் தொகையாக ரூ.1000 வீதம் ரூ. 1.62 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன என அவா் தெரிவித்துள்ளாா்.