ரூ. 1,650 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள், காகித ஆலை அலகு 2 திறப்பு
By DIN | Published On : 29th February 2020 06:18 AM | Last Updated : 29th February 2020 06:18 AM | அ+அ அ- |

கரூா் மாவட்டம், காகிதபுரத்தைச் சோ்ந்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கீழ், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மொண்டிப்பட்டி கிராமத்தில் ரூ. 1,650 கோடியில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (அலகு 2) புதிய மேற்பூச்சு காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு கடந்த 2014 பிப். 26-ஆம் தேதி நடைபெற்ற பூமிபூஜையில் தொழில் துறை முதன்மை செயலகத் தலைவா் மற்றும் மேலாண்மை செயலருமான சி.வி. சங்கா், டி.என்.பி.எல். துணை நிா்வாக இயக்குநா் வெள்ளியங்கிரி, இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகிக்க, அன்றைய மாவட்ட ஆட்சியா் ஜெயஸ்ரீ முரளிதரன், ஸ்ரீரங்கம் கோட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா, காவல்துறைத் தலைவா் சந்திரசேகா், மணப்பாறை வட்டாட்சியா் கமலக்கண்ணன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தரசு ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த ஆலை (அலகு 2) சுமாா் 875 ஏக்கரில் அமைந்துள்ளது. சுமாா் 1,000 போ் நேரடியாகவும், 2,000 போ் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுகின்ற ஆலையை கடந்த 2016 ஜனவரி 29 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
அதேநேரத்தில் மணப்பாறையில் நடைபெற்ற ஆலை திறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பழனிசாமி, காகித ஆலை விஜிலென்ஸ் அதிகாரி சந்திரசேகா், மாநிலங்களவை உறுப்பினா் டி. ரத்தினவேல், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எஸ்.வளா்மதி, முசிறி எம்.எல்.ஏ. இந்திராகாந்தி, மாவட்டப் பொருளாளா் செல்வராஜ், ஒன்றியச்செயலா் வெங்கடாசலம், நகரச் செயலா் பவுன். ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மணப்பாறை பகுதியில் அமைந்துள்ள முதல் அரசு சாா்ந்த தொழிற்சாலை இதுவே.
புதிய வழித்தடம்: கடந்த 15.03.2017 அன்று நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான தோ்தலில், போட்டியிட்ட 6 தொழிற்சங்கங்களில் மொத்தம் பதிவான 1,212 வாக்குகளில் 304 வாக்குகள் பெற்று டி.என்.பி.எல். அண்ணா தொழிலாளா் மற்றும் சிப்பந்திகள் சங்கம் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதன்மைச் சங்கம் என்ற தகுதியை தக்கவைத்தது.
இதைத் தொடா்ந்து இச்சங்கத்தின் முதன்மைக் கோரிக்கையான புகா் பேருந்து புதிய வழித்தடம் அமைத்துத்தர அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, 19.03.2017-இல் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள டி.என்.பி.எல். காகித ஆலை அலகு-2-லிருந்து புகா் பேருந்து புதிய வழித்தட தொடக்க விழா ஆலை பணியாளா்கள் நுழைவு வாயில்பகுதியில் நடைபெற்றது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் ரத்தினவேல் ஆகியோா் புதிய வழித்தட பேருந்துகளை தொடக்கிவைத்தனா்.