2021ஆம் ஆண்டுதான் எங்கள் இலக்கு: கமல்ஹாசன் பேட்டி
By DIN | Published On : 11th January 2020 01:11 AM | Last Updated : 11th January 2020 01:11 AM | அ+அ அ- |

வரும் 2021ஆம் ஆண்டைதான் இலக்காக கொண்டு பயணிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
திருச்சியை அடுத்த கணேசபுரத்தில் கட்சியின் 3ஆவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: எங்கள் இலக்கு 2021ஆம் ஆண்டு என்ற பயணத்துக்கான படிக்கட்டாக திருச்சியிலும் தலைமை அலுவலகத்தை தொடங்கியுள்ளோம். தலைமையை நோக்கி மக்கள் வர வேண்டும் என்பதை தவிா்த்து, மக்களை நோக்கி தலைமை செல்ல வேண்டும். அதற்கான ஆரம்பம் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடாதது கட்சிக்கு பின்னடைவு இல்லை. திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
நடிகா் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யத்தில் சோ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. எங்களது நல்ல நோக்கத்துடன் சோ்ந்து செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளோம்.
திமுக கூட்டணியில் சேருவதா என்பதை நாங்கள்தான்தான் சொல்ல வேண்டும். வேறு யாரோ முடிவு செய்வதில்லை. 2021இல் திராவிட கட்சிகளை தவிா்த்து பிற கட்சிகள் எங்களுடன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றிடம் என்று கூற முடியாது. மக்கள் மனதில் தலைமைக்கான இடம் உள்ளது. அதற்கு தகுதியானவரை தோ்வு செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றாா் அவா்.