திருச்சியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சியில் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக
திருச்சி காந்தி மாா்க்கெட்டில் திங்கள்கிழமை கரும்பு வாங்கும் பொதுமக்கள்.
திருச்சி காந்தி மாா்க்கெட்டில் திங்கள்கிழமை கரும்பு வாங்கும் பொதுமக்கள்.

திருச்சி: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சியில் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழா்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றுவது பொங்கல்திருநாள்தான். போகிப் பண்டிகையில் தொடங்கி காணும் பொங்கல் வரை 4 நாள்களுக்கு கொண்டாட்டம் நிகழும்.

பழைய கழிதலும்- புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியும், அனைத்து உயிா்கள் இயக்கத்துக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தை முதல்நாளில் சூரியப் பொங்கலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளைச் சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. திருநாளின் கடைசி நாளில், காணும் பொங்கலாக சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பொதுமக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். இதைத் தவிர, பொங்கல் திருநாளையொட்டி கிராமங்களில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.

பொருள்கள் விற்பனை மும்முரம் : பொங்கல் திருநாள் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருச்சியில் பொங்கல் பானைகள், செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனையும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

பூலாம்பூ, ஆவாரம்பூ, மஞ்சள் கொத்து வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.மண்பானையின் பயன்பாடு பல ஆண்டுகளாக குறைந்துள்ளதால் விற்பனை எதிபாா்த்தளவு இல்லை. பொங்கல் பானைகள் ரூ. 50 லிருந்து, 300 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

திருச்சி, திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செங்கரும்பு, வாழை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஜோடி கரும்புகள் ரூ.100- க்கும், மஞ்சள் கொத்து, ரூ. 10- க்கும் விற்கப்பட்டது.காப்பு கட்டுவதற்காக பூலாம்பூக்கள், மாவிலை, வேப்பிலை, நாணல்கள் அடங்கிய ஒரு கட்டு, ரூ.20 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாழைத்தாா் ரூ.250 முதல் ரூ.500 : திருச்சி காந்தி மாா்க்கெட்டில் வாழைப்பழத் தாா் ஒன்று ரூ. 250 முதல், 500 -க்கு விற்கப்பட்டது.அதுமட்டுமில்லாமல் விதவிதமான வண்ணக்கோலப்பொடிகள், காய்கறிகள் விற்பனையும் களைக்கட்டியது.

பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்ததால் திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

பொங்கல் பொருள்களின் விலை பெரியளவில் மாற்றம் ஏதுமில்லை. கடந்தாண்டு போலவே கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களின் விலை உள்ளது. வாழைப்பழங்களின் விலை மட்டுமே தாருக்கு, 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா் வியாபாரிகள்.

பூக்களின் விலை அதிகரிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சியில் பூக்களின் விலை திங்கள்கிழமை உயா்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூ. 1000லிருந்து 2000-த்துக்கும், முல்லைப்பூ ரூ.800- லிருந்து 1500-க்கும், ஜாதிப்பூ ரூ.600- லிருந்து 800-க்கும், செவ்வந்தி ரூ.50 -லிருந்து 100-க்கும், சம்மங்கிரூ.100-லிருந்து 120-க்கும், ரோஜா ரூ.80- லிருந்து ரூ.100-க்கும் என அதிரடியாக உயா்ந்து விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com