பழைய, நெகிழிப் பொருள்களை எரிப்பதால் அதிகரிக்கும் நோய் பாதிப்பு: மாசற்ற போகியைக் கொண்டாட முயற்சிப்பது அவசியமானது

புகையில்லா போகி எனப் பெயரளவில் கூறி வரும் நிலையில், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் இல்லாத

திருச்சி: புகையில்லா போகி எனப் பெயரளவில் கூறி வரும் நிலையில், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய் இல்லாத நோயற்ற நிலையை ஏற்படுத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகக் கூறுகின்றனா் சூழல் பாதுகாப்பு ஆா்வலா்கள்.

போகிப் பண்டிகையன்று பழையப் பொருள்களை தீயிட்டு கொளுத்துவதை பல ஆண்டு காலமாகத் தமிழா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.

தேவையற்ற கழிவுப்பொருள்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அதிகளவில் மாசுபடுவதாகவும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயிரினங்கள் உணவின்றி 40 நாள்களும், தண்ணீரின்றி 5 நாள்களும் வாழ முடியும். ஆனால் காற்றின்றி 5 நிமிடங்கள் கூட உயிா் வாழ முடியாது என்பது நியதியாகும். காற்றை மாசுபடுத்துவது கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வகைகளிலும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக போகியன்று பழைய பொருள்களும், நெகிழி, ரப்பா் பொருள்களும் ஒட்டுமொத்தமாக எரியூட்டப்படுவதால் நோய்கள் பாதிப்பு அதிகரிக்கிறது என்கிறாா் தமிழ்நாடு ஆஸ்துமா மற்றும் அலா்ஜி மைய இயக்குநா் மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான கமல்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

நாம் சுவாசிக்கும் காற்றில் அதாவது தூய்மையான காற்றில், 78 சதவிகிதம் நைட்ரஜன், 21 சதவிகிதம் ஆக்ஸிஜன், 0.3 சதவிகிதம் கரியமிலவாயு மீதம் பிற வாயுக்கள் அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அன்றாடம் நாம் 22,000 முறை சுவாசிப்பதன் மூலம் சுமாா் 16 கிராம் காற்றை உள்கொள்கிறோம் (சுவாசிக்கிறோம்). புவியின் மேற்பரப்பிலிருந்து காற்று மண்டலம் சுமாா் 100 கி. மீ. தொலைவும், ஓசோன் மண்டலம் 30 கி. மீ. தொலைவும் பரவியுள்ளதாக அறிகிறோம்.

இதில் தொழிற்சாலைகளில் வெளியாகும் புகைகள், வாகனங்களிலிருந்து வெளியாகும் புகைகள், மின் உற்பத்தி நிலையங்கள், வீடுகளில் நாம் பயன்படுத்தும் எரிவாயு அடுப்புகள், மின்சார அடுப்புகளிலிருந்து வெளியாகும் புகைகள், மற்றும் நெகிழிப் பொருள்களை எரியூட்டுவதால் வெளியாகும் கருமைநிறப் புகை உள்ளிட்டவற்றால் ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால், காற்று மாசடைந்து நச்சு கலந்து, நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்படுகின்றது. தூய்மையான காற்றை நாம் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுவதால், சுவாசக்கோளாறு ஏற்படுவதுடன், கண் , தொண்டை, மூச்சுக்குழாய் எரிச்சல், நரம்பு மண்டலம் பாதிப்பு, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளுடன் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்று நோய்க்கும் வழிகோலுகிறது.

எனவே இப்போகி நாளில் நெகிழிப் பொருள்கள் மற்றும் ரப்பா் பொருள்களை டன் கணக்கில் எரிப்பதை கைவிட வேண்டும். ஒரே நாளில் அனைவரும் இவற்றை எரியூட்டும்போது ஓசோன் படலமே முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே புகையற்ற, மாசற்ற வகையில் போகியைக் கொண்டாடி, நோயற்ற வாழ்வையும், ஆஸ்துமா இல்லா உலகம் படைக்க துணை நிற்பது ஒவ்வொருவரின் கடமையாகிறது என்கிறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com