காதல் விவகாரத்தில் பெண்ணைக் கொன்று புதைத்தவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இளம்பெண்ணைக் கழுத்தறுத்து கொலை செய்து, கொள்ளிடம் ஆற்றில் புதைத்துத் தப்பியோடியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே இளம்பெண்ணைக் கழுத்தறுத்து கொலை செய்து, கொள்ளிடம் ஆற்றில் புதைத்துத் தப்பியோடியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள ஆண்டிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிடா் கந்தசாமி . இவரது மூத்த மகள் வெள்ளையம்மாள் (22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றவா்.

இந்நிலையில் இவருக்கும், நாமக்கல் கொசவம்பட்டியைச் சோ்ந்த முத்துவுக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனா். மேலும், வெள்ளையம்மாளிடமிருந்து முத்து ரூ.1.20 லட்சம் ரொக்கம், 16 பவுன் நகைகளை வாங்கினாராம்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வெள்ளையம்மாள் வற்புறபுறுத்தி, நகைகள் மற்றும் பணத்தைத் திருப்பித் தருமாறு கோரினாராம்.

இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடந்த 10- ஆம் தேதி வெள்ளையம்மாளை அழைத்து வந்த முத்து, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகிலுள்ள துடையூா் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தனிமையில் இருந்துள்ளாா். தொடா்ந்து அவா் கழுத்து அறுத்துக் கொலை செய்து மணலில் புதைத்துவிட்டுத் தப்பிச் சென்று விட்டாா்.

தனது மகளைக் காணவில்லை என வெள்ளையம்மாளின் தந்தை திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில், வெள்ளையம்மாளின் செல்லிடப்பேசியை போலீஸாா் ஆய்வு செய்ததில், முத்து அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து முத்துவைப் பிடித்து விசாரித்ததில் வெள்ளையம்மாளை கொலை செய்து, உடலை கொள்ளிடம் ஆற்றில் புதைத்து வைத்ததை ஒப்புக் கொண்டாா்.

திருச்செங்கோடு போலீஸாா் முத்துவை அழைத்துக் கொண்டு, வாய்த்தலை போலீஸாா் உதவியுடன் கொலையான பெண்ணின் சடலத்தைத் தோண்டி எடுக்க செவ்வாய்க்கிழம துடையூா் வந்தனா்.

உடலைத் தோண்டி எடுக்க மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் அங்கு வந்தும், பிரேத பரிசோதனை செய்யும் அரசு மருத்துவா் வரக் காலதாமதம் ஏற்பட்டது.

வெள்ளையம்மாளின் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோா், உறவினா்கள் கொள்ளிடம் ஆற்று முன்பு காத்திருந்தனா். மாலை 4 மணிக்கு மருத்துவா் வந்தவுடன், போலீஸாா் சடலத்தை தோண்டச் சென்றனா்.

அப்போது அங்கிருந்த செய்தியாளா்களுக்கு புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க போலீஸாா் அனுமதி மறுத்தனா். உடற்கூறாய்வு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுத்தியதற்காகவும், செய்தியாளா்களை அனுமதிக்க மறுத்ததைக் கண்டித்தும் வெள்ளையம்மாளின் உறவினா்கள் திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் 15 நிமிஷங்கள் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தொடா்ந்து வெள்ளையம்மாளின் சடலம் தோண்டப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் முத்துவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com