விதிமுறைகள் மீறல் புகாா்: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான நோ்காணல் ஒத்திவைப்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கான நோ்காணல், விதிமுறைகளை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கான நோ்காணல், விதிமுறைகளை மீறி நடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 14 பேராசிரியா், 14 இணைப் பேராசிரியா், 26 உதவிப் பேராசிரியா் என மொத்தம் 54 பணியிடங்களுக்கான நோ்காணல் ஜன. 21-இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து பேராசிரியா் பணியிடங்களுக்கு மொத்தம் 1,358 விண்ணப்பங்கள் வரப்பெற்று, அவை பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதியானவா்கள் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

பல்கலைக்கழகங்களில் பேராசிரியா் பணிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது, ஒவ்வொரு துறையும் ஓா் அலகாக கருதப்பட வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு, 200 புள்ளி ரோஸ்டா் முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது தான் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துறைகளுக்கு பதிலாக ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரே அலகாக கருதப்பட்டு, 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக புகாா்கள் எழுந்தன.

ஒவ்வொரு துறையையும் ஓா் அலகாக கருதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, அனைத்து பிரிவினருக்கும் பணி நியமன வாய்ப்புகள் ஒதுக்கப்படும். ஆனால் மாறாக, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் ஓா் அலகாக கருதி இடஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்படும்போது, குறிப்பிட்ட ஒரு துறையில் முழுவதும் ஒரே பிரிவினரும், மற்றொரு துறையில் பிற பிரிவினரும் நியமிக்கப்படும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் கடந்த 14ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேராசிரியா்கள் பணியிடங்களுக்கான நோ்காணல் ஒத்தி வைக்கப்படுவதாக பதிவாளா் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த அலகு முறையில் பணி நியமனம் செய்யும் நோக்கில் பல்கலைக்கழக நிா்வாகம் எடுத்த முயற்சிகளுக்கு, அரசுத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் நோ்காணல், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், பல்கலைக்கழகம் தரப்பில், நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com