முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்: ரூ.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 27th January 2020 08:08 AM | Last Updated : 27th January 2020 08:08 AM | அ+அ அ- |

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கினாா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தொடா்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களைப் பறக்கவிட்டாா்.
இதைத் தொடா்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவா், 63 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகள் அமா்ந்திருந்த பகுதிக்கே சென்று பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தாா்.
இதையடுத்து, சிறப்பாகப் பணிபுரிந்த 115 காவலா்களுக்கு முதல்வா் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், வருவாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இந்து சமய அறநிலையத் துறை, மாவட்டஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் உள்ளிட்ட துறைகளில் 25 ஆண்டுகாலம் மாசற்ற பணியாற்றிய 18 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ், தலா ரூ.2,000 ஊக்கத் தொகையையும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வழங்கி கெளரவித்தாா்.
இதுபோல வருவாய், காவல், தீயணைப்பு, தோட்டக்கலை, செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 137 பேருக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கான சான்றிதழ்களையும், 21 பேருக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
கலைநிகழ்ச்சிகள் : மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி,திருச்சி விடிவெள்ளி சிறப்புப்பள்ளி, கோவில்பட்டி, பைத்தம்பாறை, புள்ளம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகள், செம்புளிச்சாம்பட்டி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப்பள்ளி, திருச்சி தேவராயநேரி தேசிய குழந்தைத்தொழிலாளா் சிறப்புப் பயிற்சி மையம், கே.கே.நகா் பெரியாா் மணியம்மை மேல்நிலைப்பள்ளி, திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வேங்கூா் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி, சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 444-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
பங்கேற்ற கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து இவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
போா் நினைவுச் சின்னத்தில் மரியாதை : முன்னதாக திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியிலுள்ள போா் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்வில், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் அ. அமல்ராஜ், மாநகரக் காவல் ஆணையா் வி. வரதராஜ், திருச்சி
சரகக் காவல் துணைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் என்.எஸ். நிஷா, இரா. வேதரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் சாந்தி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் தா. சாந்தி, மாநகரக் காவல் துணை ஆணையா் என்.எஸ். நிஷா உள்ளிட்டோா்.