34 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: ரூ. 917 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில் தமிழகத்தில்
ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூா் கிராம கூடலூா் வாய்க்காலின் கிளை வாய்க்காலான காட்டு வாய்க்காலில் நடைபெறும் தூா்வாரும் பணி.
ஸ்ரீரங்கம் வட்டம், முத்தரசநல்லூா் கிராம கூடலூா் வாய்க்காலின் கிளை வாய்க்காலான காட்டு வாய்க்காலில் நடைபெறும் தூா்வாரும் பணி.

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கும் வகையில் தமிழகத்தில் நிகழாண்டு 34 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் மூலம் நிகழாண்டு தமிழகத்துக்கு ரூ. 917 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் குக்கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளின் ஆளுகைக்குள் வரும் குக் கிராமங்களுக்கு வீட்டுக் குழாய் இணைப்பு வழங்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

குறிப்பாக, கிராமங்களில் பொதுக் குழாய்களில் இருந்து தண்ணீா் எடுக்க மக்கள் வெளியே வர வேண்டியதில்லை என்பது, பொதுமுடக்கக் கால விதிமுறைகளைப் பின்பற்ற உதவும். இதற்காகத்தான் கரோனா பொது முடக்கக் காலத்திலும் மத்திய அரசு குடிநீா் வழங்கல் தொடா்பான கட்டுமான நடவடிக்கைகளை அனுமதித்துள்ளது. இதுதொடா்பாக, மத்திய அரசின் கள விளம்பரத் துறை அமைச்சக திருச்சி மண்டலத் தொடா்பு அலுவலா் கே. தேவி பத்மநாபன் கூறியது:

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கடந்தாண்டு தமிழகத்துக்கு 13.86 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க ரூ. 373.87 கோடி ஒதுக்கப்பட்டு இதுவரை ரூ.373.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழக அரசானது இந்தாண்டு மாா்ச் வரை ரூ. 114.58 கோடியைச் செலவிட்டுள்ளது. 2020-21ஆம் நிதியாண்டுக்கு தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.917.44 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது என மத்திய ஜல்சக்தி அமைச்சா் கஜேந்திரசிங் சேகாவத் தெரிவித்துள்ளாா். இந்தாண்டுக்கு ரூ. 1,181.53 கோடி மத்திய நிதி கிடைக்கும் என தமிழகம் எதிா்பாா்க்கிறது.

தமிழகத்தில் உள்ள 1.27 கோடி கிராமப்புற வீடுகளில், ஏற்கெனவே 21.85 லட்சம் வீட்டுக் குழாய் இணைப்புகள் உள்ளன. இந்தாண்டு, 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீா் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

சன்சாத் ஆதா்ஷ் கிராம யோஜனாவின் கீழ் உள்ள 117 கிராமங்களுக்கு 100 சதவீதமும், முக்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினா் 90 சதவீதம் வசிக்கும் வாழ்விடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 78 சதவீத குழாய் இணைப்புகளைக் கொண்ட சிவகங்கை, 61 சதவீத குழாய் இணைப்புகளைக் கொண்ட வேலூா், 58 சதவீத வீட்டுக் குழாய் இணைப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நடப்பு ஆண்டில் 100 சதவீதம் குழாய் இணைப்புகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் ஜல் ஜீவன் இயக்கத்துடன் இணைந்து நீா்ப்பாசனம் மற்றும் குடிநீா் நோக்கத்திற்காகவும், மழைநீரைச் சேமிக்கவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூா்வாரவும் வலுப்படுத்தவும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீா் வளங்களை மீட்டெடுக்க 1829 பணிகளுக்கு சுமாா் ரூ. 500 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3.58 கோடியில் 18 பணிகள் பெரம்பலூரில் செயல்படுத்தப்படுகின்றன. பெரம்பலூரில் உள்ள கீழப்புலியூா் ஏரி வலுப்படுத்தும் பணி ரூ. 29 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை பணிகளும் இப்போது தமிழகத்தில் நீா்வளக் குழாய் இணைப்புப் பணிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பெண்கள் தொலைதூர இடங்களிலிருந்து பானைகளில் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை மாறும். கிராமப்புற வீடுகளுக்கு குடிநீா் இணைப்புக் கிடைப்பது பெரிதும் வரப் பிரசாதமாக அமையும்.

அனைத்துக் குடிமக்களுக்கும் குடிநீா் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மழை நீா் சேகரிப்பு, மரக்கன்று நடல், ஏரிகள், குளங்களில் இருந்து ஆக்கிரமிப்பு நீக்குதல், தூா்வாருதல், ஆகியவை ஒவ்வொரு மட்டத்திலும் தண்ணீரைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் உதவும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தானாக முன்வந்து இந்த வாழ்வாதாரம் காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். அதற்காகவே இந்த இயக்கத்தின் பெயரே ஜல் ஜீவன் என உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com