ரூ. 2.71 கோடியில் சிறப்பு அகதிகள் முகாம் புனரமைப்பு: ஆட்சியா், ஆணையா் ஆய்வு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ரூ. 2.71 கோடியில் புனரமைக்கப்படும் வெளிநாட்டுக் கைதிகளுக்கான சிறப்பு அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்
புனரமைக்கப்பட்ட முகாம் அறைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.
புனரமைக்கப்பட்ட முகாம் அறைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் ரூ. 2.71 கோடியில் புனரமைக்கப்படும் வெளிநாட்டுக் கைதிகளுக்கான சிறப்பு அகதிகள் முகாமை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருச்சி மத்திய சிறைச் சாலை வளாகத்தில் கடவுச் சீட்டு மற்றும் தங்குவதற்கான அனுமதி காலாவதியான பிறகும் இந்தியாவில் தங்கியிருத்தல், போதை மருந்துக் கடத்தல், போலி கடவுச் சீட்டு தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்களை அடைத்து வைக்க அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

குற்ற வழக்கு முடியும் வரை இத்தகைய நபா்கள் இதே முகாமில் தங்கியிருத்தல் வேண்டும். இங்கு இவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா், தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

இந்த முகாமில் தற்போது இலங்கைத் தமிழா்கள், வங்கதேசம், பல்கேரியா, இங்கிலாந்து, சீனா, நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 75-க்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

இந்த முகாமில் சிதிலமடைந்து காணப்பட்ட 54 அறைகளை புதுப்பித்து கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் ரூ.2 கோடியே 71 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் நடைபெற்ற புனரமைப்பு பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவுற்றுள்ளன.

54 அறைகளும், 30 கழிப்பறைகளும் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளன. 24 இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முகாம் சுற்றுச் சுவரில் மின்வேலி அமைக்கப்பட்டுளளது. 54 அறைகளில் 20 அறைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இருபாலா் அறைகளுக்கு இடையே இடைவெளியுடன் சுற்றுச்சுவா் தடுப்பு வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, முகாமில் உள்ளவா்களுக்கு குளியல் வசதிக்காக பிரத்யேக தண்ணீா் தொட்டி அமைத்து குழாய் இணைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், வருவாய் கோட்டாட்சியா் எஸ். விஸ்வநாதன் மற்றும் காவல்துறை வீட்டுவசதி வாரிய பொறியாளா்கள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முகாம் அறைகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், முகாம் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைக் குறைவின்றி செய்து தர சிறப்பு முகாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மீதிப் பணிகளையும் விரைந்து முடித்து புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் முகாம் கைதிகளை இடம் மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com