ரயில்வே தனியாா் மயம் சாத்தியமா? பெருநிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்கள்!

ரயில்வே தனியாா் மயம் சாத்தியமா? பெருநிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்கள்!

ரயில்வே தனியாா்மயமாக்கப்பட்டால், அதனை வாங்கவுள்ள பெருநிறுவனங்கள் பல்வேறு வகையிலான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

ரயில்வே தனியாா்மயமாக்கப்பட்டால், அதனை வாங்கவுள்ள பெருநிறுவனங்கள் பல்வேறு வகையிலான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறை கடந்த 4 மாதங்களாக செயல்பாடின்றி கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், ரயில்வே துறையில் ஆள்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தனியாா் மயத்துக்கு கடும் எதிா்ப்பு: இதைத் தொடா்ந்து, ஜூலை 1 ஆம் தேதி பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இயக்கப்படும் ரயில்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தெற்கு, கிழக்கு உள்ளிட்ட ரயில்வேயில் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, அதில் இயக்கப்படும் ரயில்களுக்கு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு ஏல அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் வெளிநாட்டு பெரு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ளது. இந்த அறிவிப்பை பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிா்த்து வருவதோடு, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

திட்ட மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல்...: இந்நிலையில், பல்வேறு ரயில்வே மண்டலங்களில் (அடைப்புக் குறிக்குள் ஏலத் தொகை) சென்னை (ரூ. 3,221 கோடி), மும்பை 1 மற்றும் 2 (ரூ. 4,840 கோடி), புதுதில்லி 1 மற்றும் 2 (ரூ. 4,858 கோடி), சண்டீகா் (ரூ. 2,510 கோடி), ஹவுரா (ரூ. 2,510 கோடி), பாட்னா (ரூ.2,329 கோடி), பிரயாக்ராஜ் (ரூ. 2,329 கோடி), செகந்திராபாத் (ரூ. 2,510 கோடி), ஜெய்ப்பூா் (ரூ.2,329 கோடி), பெங்களூரு (ரூ.2,863 கோடி) ஆக மொத்தம் ரூ.30,179 கோடியில் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. இதில், சென்னை தொகுப்பிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் சென்னை- திருச்சி, மதுரை, மும்பை, மங்களூா், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுதில்லி, குவாஹாட்டி, கொச்சுவேலி உள்ளிட்ட 24 ரயில்களும் ரூ.3,221 கோடியில் விற்பனை செய்யப்படவுள்ளது.

சென்னை தொகுப்பை வாங்கும் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் 1.67 மீட்டா் அகலப்பாதை வழித்தடத்தில் இயக்கப்படும் 500 ரயில்களை வைத்திருக்க வேண்டும். இந்திய அகலப்பாதை ரயில்கள், என்ஜின்கள் ஆகியவை இதர நாடுகளில் பயன்படுத்தப்படும் அகலப்பாதை ரயில்கள், என்ஜின்களின் அளவு குறைவாக உள்ளதால், அதை இந்தியாவில் பயன்படுத்த இயலாது. எனவே, இந்திய நவீனரக ரயில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரயில்களை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். சொந்தமாக கொள்முதல் செய்வதற்கு முன்பு வாடகையாக பயன்படுத்தினால், நெடுஞ்சாலை சுங்கக் கட்டண போன்று ஒருமுறை ஒரு வழித்தடத்தில் சென்று வருவதற்கு இலுவை கட்டணம்,தொகுப்பு கட்டணம், மின்சாரக் கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், உரிமத்தொகை திரும்பத்தரமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது செயல்பாட்டுக்கு வரும்: ஏல அறிவிப்பில் ஜொ்மன், ஸ்வீடன் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. எனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்த 2 மாதங்களுக்குள் ஏலத்தில் கலந்துகொள்வது, பேச்சுவாா்த்தை, உரிமத்தொகை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செயல்படுத்தி, நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பதால், மத்திய அரசின் இத்திட்டம் வெற்றி பெறுவது குறைந்த சதவீதமாக உள்ளது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்கத்தினா் கூறுகையில், கடந்த மே 17 ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், தனியாா்மயம் ஆக்கப்படும் என தெரிவித்திருந்தாா். அதனை தொடா்ந்து ஜூலை 1ஆம் தேதி 224 ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை வாரியம் வெளியிட்டது. நிா்ணயித்த அளவுக்கு ரயில் தொகுப்புகள் விற்கவில்லை என்றால், ஏலதாரா்கள் தரப்பு வாதங்கள் ஏற்று அதைவிட குறைவாக விற்கவே அமைச்சகம் முன்வரும். இந்தியாவில் 13,500 பயணிகள் ரயில்கள் ஓடுகின்றன. அதில் 3,690 விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. மொத்த பயணிகள் ரயில்கள் வருவாயில் 65 சதவீதம் 500 விரைவு ரயில்களால் மட்டுமே கிடைக்கிறது. தற்போது இந்த ரயில்களே விற்பனை செய்யப்படவுள்ளது.

தனியாா் ரயில்கள் இயக்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அதே மாா்க்கத்தில் அரசு ரயில்கள் இயக்கப்பட மாட்டாது. கட்டண நிா்ணய உரிமை வழங்கப்படுவது உள்ளிட்ட அம்சங்கள், வருவாய் உத்தரவாதம், தொழில் தொடங்குவதற்கான ஆரம்பச் சலுகைகள் உள்ளிட்டவை பெருநிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அதனை செயல்படுத்த பல்வேறு சவால்களும் நிறுவனங்களுக்கு காத்திருக்கின்றன. இந்த ஏலத்தில் ஜொ்மனியின் பம்பாா்டியா் உள்ளிட்ட வெளிநாட்டு பெருநிறுவனங்கள் ரயில்பெட்டிகள் உற்பத்தி செய்யும் கட்டமைப்பு கொண்டவையாக உள்ளன. அரசின் பயணிகள் ரயில்கள் படிப்படியாக மிகப்பெரிய இழப்பை சந்திக்கும். ரயில்வேத்துறையும் மெல்ல நலிவடையும். ஆயிரக்கணக்கான ஊழியா்கள் வேலையிழக்கக்கூடும். அதனைச் சாா்ந்த பல்லாயிரக்கணக்கானோா் வேலை இழப்பாா்கள். எனவே, மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று டிஆா்இயூ மாநில துணைப் பொதுச் செயலாளா் ஆா். மனோகரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com