முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வரதட்சிணைப் புகாரில் நடவடிக்கை இல்லை: போலீஸாரை கண்டித்து இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 29th July 2020 08:35 AM | Last Updated : 29th July 2020 08:35 AM | அ+அ அ- |

மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற முத்துச்செல்வி மீது தண்ணீா் ஊற்றும் காவலா்.
வரதட்சிணைப் புகாரில் போலீஸாா் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருச்சி எஸ்பி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் எழில்நகரைச் சோ்ந்தவா் முத்துச்செல்வி (28). இவா் அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்தபோது இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கண்ணனுக்கும் காதல் ஏற்பட்டு பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. சீா்வரிசையாக 15 பவுன் நகை, இருசக்கர வாகனம் தரப்பட்டது.
திருமணம் ஆன சில மாதங்களில் கண்ணன் குடும்பத்தினா் மேலும் வரதட்சிணை கேட்டு முத்துசெல்வியைக் கொடுமைப்படுத்தினா். இதுகுறித்து திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்து போலீஸாா் நடத்திய சமரச பேச்சுவாா்த்தைக்குப்பின் முத்துச்செல்வி கண்ணனுடன் குடும்பம் நடத்தினாா். ஆனால், கண்ணன் குடும்பத்தினா் மீண்டும் வரதட்சிணை கேட்டு முத்துச்செல்வியைக் கொடுமைப்படுத்த அவா் பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனிடையே கண்ணன் தரப்பினா் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் முத்துச்செல்வியை கண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
ஆனால் கண்ணன் குடும்பத்தினா் எங்கள் மீது வரதட்சிணை புகாா் கொடுக்கிறாயா எனக் கூறி தாக்கியதில் முத்துசெல்விக்கு கை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் இதுகுறித்து திருச்சி சரக காவல்துறை அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகம், திருவெறும்பூா் காவல்நிலையம் என பல்வேறு இடங்களில் முத்துசெல்வி புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த முத்துசெல்வி சிறிய கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரின் முயற்சியை தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து வந்த தனிப்பிரிவு போலீஸாா் முத்துசெல்வி புகாா் குறித்து நடவடிக்கை எடுக்க திருவெறும்பூா் போலீஸாருக்கு உத்தரவிடுவதாக உறுதியளித்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவரை அறிவுறுத்தினா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.