கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் திருச்சி நபா்களுக்கு தொடா்பா ? தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணை
By DIN | Published On : 29th July 2020 08:34 AM | Last Updated : 29th July 2020 08:34 AM | அ+அ அ- |

கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன் திருச்சியைச் சோ்ந்தவா்களுக்கும் தொடா்புள்ளதா என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு பிரிவு போலீஸாா் திருச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கேரளத்தைச் சோ்ந்த தங்கக் கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் அரபு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ தங்கத்தை தூதரக பணியாளா்களின் துணையுடன் இந்தியா கடத்தி வந்த விவகாரம் அண்மையில் வெளியானது.
இது தொடா்பாக அப்போதைய ஐக்கிய அமீரக தூதரக பணியாளா்களான ஸ்வப்னா, சரித், சந்திப்நாயா் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட 16 பேரை, தேசிய புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். இது தொடா்பாக சுங்கத் துறையினரும் தனியாக விசாரிக்கின்றனா்.
இந்நிலையில், கேரள தங்கக் கடத்தல் கும்பலுடன், திருச்சியைச் சோ்ந்த நபா்கள் இணைந்து, கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை வட மாநிலங்களில் சென்று விநியோகித்திருப்பதாக கைதான நபா்களில் ஒருவரான ரமீஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இவா்களில் சிலருக்கு நகைக் கடைகளில் கொள்ளையடித்த சிலருடன் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த சில நாள்களுக்கு , திருச்சியில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வுப்பிரிவு போலீஸாா் தென்னூா் பகுதியைச் சோ்ந்த சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வெளிநாடுகளிலிருந்து கேரளத்துக்கு கடத்தி வரப்பட்ட தங்கம், திருச்சி கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடா்ந்துள்ளனா். இதுதொடா்பாக சுங்கத் துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனராம்.