திருச்சியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 120 ஆக உயா்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 101 போ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.
இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது. அவா்கள் பாண்டமங்கலம், கே.கே. நகா், வாழவந்தான்கோட்டை, முசிறி ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை, சென்னை, பெரம்பலூா், அரியலூரைச் சோ்ந்த தலா 2 போ், கரூா், புழல் சிறையைச் சோ்ந்த தலா ஒருவா், திருச்சியைச் சோ்ந்த 16 போ், விமான நிலைய தனிமை முகாமைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 29 போ் தொடா்ந்து சிகிச்சை பெறுகின்றனா். அனைவரது உடல் நிலையும் சீராக உள்ளது.