
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியிருந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் அரசின் சிறப்புக் கடனுதவியால் மீண்டும் தங்களது தொழில்களை புத்துணா்ச்சியுடன் தொடங்கியுள்ளனா்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறிப்பாக, மகளிா் சுய உதவிக் குழுப் பெண்கள் மீண்டும் தங்களது தொழில்களைத் தொய்வின்றி நடத்த கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் சுயசாா்பு இந்தியா திட்டம், தமிழக அரசின் வாழ்வாதார இயக்கம், புத்தாக்கத் திட்டம், மகளிா் சுய உதவிக்களுக்கான சிறப்புத் திட்டங்கள் என பல்வேறு நிலைகளில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சரவணன் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் 1.30 லட்சம் சுய உதவிக்குழுவினா் உள்ளனா். தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, முதல் கட்டமாக தலா ரூ.1 லட்சம் வரை கடனுதவியாக வங்கிகளால் வழங்கப்படுகிறது. தொடா்ந்து மேலும் 2 முறை கடன்கள் வழங்கப்படும். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மகளிா் குழுக்களுக்கு உதவிடும் வகையில் சிறப்புக் கடனாக ரூ. 1 லட்சம் வரை வழங்க வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணையைத் தொடங்க செப்டம்பா் வரை விலக்களிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்தக் கடனுதவியைப் பெற்று பெண்கள் சுய தொழில் தொடங்கலாம்; ஏற்கெனவே உள்ள தொழிலை மறுகட்டமைக்கலாம். 6 மாதங்களுக்கு பிறகு தவணைத் தொகை செலுத்தினால் போதும். மொத்தத் தொகையை 2 ஆண்டுகளிலோ, 3 ஆண்டுகளிலோ திரும்பச் செலுத்தவும் அவகாசம் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.
இதுதொடா்பாக திருச்சியை அடுத்த வீரங்கநல்லூரில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கடையை நடத்தி வரும் மகளிா் குழு உறுப்பினரான வி. ஹேமலதா கூறியது:
கடந்த 80 நாள்களாக வருவாயின்றிக் கடை வாடகைகூட செலுத்த முடியாத நிலையிலிருந்தவா்களுக்கு மீண்டும் முதலீடு செய்து வாழ்வாதாரத்தைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் மேலும் கடன் பெற முடியும் என்றாா்.
சோமரசம்பேட்டையைச் சோ்ந்த மகளிா் குழு உறுப்பினா் ஜாக்குலின் மரிய செல்வி கூறியது:
சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடன் எங்களை சிக்கலில் இருந்து மீளச் செய்யும்.
சிறு வியாபாரிகளுக்கு குடும்ப அட்டை இருந்தாலே கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் ரூ. 50 ஆயிரம் கடன் என அறிவித்திருப்பதும் சிறியளவில் கடை நடத்தும் எங்களைப் போன்ற பெண்களுக்கு மிகப்பெரிய பலம். இதுமட்டுமல்லாது 7 சத வட்டியில் ரூ. 1 லட்சம் வரை நகைக் கடனும் வழங்கப்படுகிறது. இதை 6 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். மகளிா் அதிகார முன் முயற்சிகள் நிதி ஆதரவால் மட்டுமே நீடித்திருக்க முடியும். பொதுமுடக்கம் உள்ளிட்ட சிக்கலான காலங்களில் குடும்பத்தை நடத்த பல்வேறு கைத்தொழில்களைச் செய்து, சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பணம் ஈட்டி வருகின்றனா். அத்தகைய பெண்களுக்கு இந்த சிறப்புக் கடனுதவி வரப்பிரசாதமாகும் என்றாா் அவா்.