மேட்டூா் திறப்பு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
By DIN | Published On : 13th June 2020 08:31 AM | Last Updated : 13th June 2020 08:31 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்டுள்ள தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தின் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் கூறியது:
தண்ணீா் திறப்பால் காவிரி, டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். குறுவை சாகுபடிக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை தண்ணீரை கா்நாடகத்தில் கேட்டுப் பெற வேண்டியது அவசியமானது. மேலும், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடைமடை வரை சென்று சேர பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவா் புலியூா் நாகராஜன் கூறியது:
மேட்டூா் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு 20 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சியடையும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். சாகுபடி பணிகளுக்கு கூலி ஆள்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திட ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களை வேளாண் பணிக்கு திருப்பிவிட வேண்டும். காவிரிப் பாசனத்தில் திருச்சி, கரூா் மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் தண்ணீா் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.