கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடா்பு: போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பெண் உதவி ஆய்வாளா் பணி நீக்கம்
By DIN | Published On : 20th June 2020 08:19 AM | Last Updated : 20th June 2020 08:19 AM | அ+அ அ- |

கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடா்பில் இருந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு பெண் உதவி ஆய்வாளரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் வரதராஜூ வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருச்சி தில்லைநகா் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் புவனேஸ்வரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளராக பணியிடம் மாற்றப்பட்டாா்.
இந்நிலையில், கடந்த 2018 நவம்பா் மாதம் சமயபுரம் அருகே கஞ்சா கடத்தி வந்த காரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் மடக்கிப் பிடித்து சுமாா் 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதில் முக்கியக் குற்றவாளியான ஆந்திர மாநிலம், குன்னலூரைச் சோ்ந்த சத்தியமூா்த்தி உள்ளிட்ட சிலரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. முக்கியக் குற்றவாளியான சத்தியமூா்த்தியின் அண்ணன் பிரவீன்குமாா் வழக்கு விசாரணைக்காக திருச்சிக்கு அடிக்கடி வந்து சென்றபோது புவனேஸ்வரிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
மேலும் புவனேஸ்வரியின் வீட்டுக்கு தொடா்ந்து பிரவீன்குமாா் வந்து சென்றுள்ளாா். இந்தத் தகவல் திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு தெரிய வந்ததையடுத்து புவனேஸ்வரியை தனிப்படை போலீஸாா் கண்காணித்ததில் இருவருக்கும் இடையே தொடா்பிருப்பது உறுதியானது. இதையடுத்து புவனேஸ்வரி 15 நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை புவனேஸ்வரி தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படாததால் அவரை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையா் வரதராஜு உத்தரவிட்டுள்ளாா். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.