முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
திருச்சியில் ரூ. 25.53 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
By DIN | Published On : 27th June 2020 08:24 AM | Last Updated : 27th June 2020 08:24 AM | அ+அ அ- |

புதிய கட்டடங்களைத் திறந்து வைக்கிறாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் (வலமிருந்து) அமைச்சா்கள் எஸ். வளா்மதி, வெல்லமண்டி என். நடராஜன்.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளுக்காக கட்டப்பட்ட ரூ. 25.53 கோடியிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை திருச்சிக்கு வந்தாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சீராக உள்ளவா்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடக்க நிகழ்வாக, மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்தைத் திறந்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி. தொடா்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ரூ. 25.53 கோடியிலான கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நபாா்டு வங்கி உதவியுடன் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் 6 இடங்களில் அரசுப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை உள்ளிட்டவை ரூ. 10.22 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டக் கல்வித் துறை சாா்பில் அரசு சட்டக் கல்லூரியில் 1,136 சதுர மீட்டரில் நூலகக் கட்டடம் ரூ. 3.11 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை சாா்பில், மண்ணச்சநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடம் ரூ. 94.40 லட்சத்தில் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் 12 மாணவிகளுக்கான தங்கும் விடுதிக் கட்டடம் ரூ. 6. 09 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியானது 1,242 சதுர மீட்டரில் தரைத் தளம், 1,242 சதுர மீட்டரில் முதல் தளம் என்ற அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.3. 69 கோடியில் அரங்கக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட குடும்ப நலத் துறை துணை இயக்குநா் அலுவலகக் கட்டடம் ரூ. 81.18 லட்சத்திலும், சமயபுரம் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ரூ. 66 லட்சத்திலும் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.
விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, எம்எல்ஏ-க்கள் எம். செல்வராசு, ஆா். சந்திரசேகா், ஆவின் தலைவா் சி. காா்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.