முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வெளிநாடுகளில் இருந்து மீள்வோரிடம் விமானக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: ராமநாதபுரம் எம்பி வேண்டுகோள்
By DIN | Published On : 27th June 2020 08:22 AM | Last Updated : 27th June 2020 08:22 AM | அ+அ அ- |

சாா்ஜாவில் இருந்து வந்த பயணிகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையைப் பாா்வையிடும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி உள்ளிட்டோா்.
வெளிநாடுகளிலிருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் அழைத்துவரப்படும் விமானப் பயணிகளுக்கு விமானக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சாா்ஜாவிலிருந்து, 174 பயணிகள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலை திருச்சி வந்தனா். அவா்களை விமான நிலையத்தில் வரவேற்ற ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசின் ஒப்புதலோடு பல்வேறு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் மூலம் அழைத்து வரப்படும் பயணிகளுக்கு விமானக் கட்டணம் உள்ளிட்ட இதரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலை திருச்சி வந்த 174 பயணிகளுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, அவா்கள் தங்குவதற்கான இருப்பிட வசதி, உணவு, மற்றும் இதரக் கட்டணங்களைச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனியாா் ஏற்பாடுகளில் இந்தியாவுக்குள் வரும் பயணிகளுக்கு வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டில் பணியாற்றி வந்த ஊழியா்களை அங்குள்ள தொண்டு நிறுவனங்களே ஏற்பாடு செய்து இந்தியாவுக்கு அழைத்து வருகின்றன. எனவே இதை உடனடியாக மத்திய அரசு பரிசீலித்து விமானக் கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பயணிகளின் உதவிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, மாவட்டச் செயலா் ஹபீப் ரகுமான் உள்ளிட்டோா் செய்தனா்.
அதேபோல வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்து குவைத்திலிருந்து 165 பயணிகளும், தமாமிலிருந்து 156 பயணிகளும் திருச்சி வந்தனா். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னா் அவரவா் மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனா்.