முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வரைவு வாக்காளா் பட்டியல்: அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
By DIN | Published On : 03rd March 2020 05:41 AM | Last Updated : 03rd March 2020 05:41 AM | அ+அ அ- |

வரைவு வாக்காளா் பட்டியல் குறித்த, அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்திலுள்ள நகா்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தோ்தல் நடத்துவதற்கான வாக்குச்சாவடி வரைவு வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் பாா்வைக்கும் வைக்கபட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதி வாக்காளா் பட்டியல் மாா்ச் 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, வரைவு வாக்காளா் பட்டியல் குறித்த கருத்துக்களை அரசியல் கட்சியினா் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகியவற்றில் ஆண்களுக்கு 80, பெண்களுக்கு 80, இருதரப்பினருக்கும் 990 என மொத்தம் 1150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், திருச்சி மாநகராட்சியில் ஆண்களுக்கு 26 , பெண்களுக்கு 26, இருதரப்பினருக்கும் 719 என மொத்தம் 771 வாக்குச்சாவடிகளும், அமைக்கபட்டுள்ளன. துவாக்குடி நகராட்சியில் 33, மணப்பாறை நகராட்சியில் 35, துறையூரில் 32 வாக்குச்சாடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சிகளில் ஆண் 27, பெண் 27 மற்றும் இருதரப்பினருக்கும் 225 என மொத்தம் 279 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி,காட்டுப்புத்தூா், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளுா், எஸ்.கண்ணனூா்,சிறுகமணி, தாத்தையங்காா் பேட்டை, தொட்டியம், உப்பிலியபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச்சாவடிகளும், கூத்தைப்பாரில் 18, லால்குடியில் 23, மண்ணச்சநல்லூரில் 28, முசிறியில் 30 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி ஆணையா் எஸ்.சிவசுப்ரமணியன், துணை ஆணையா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், துவாக்குடி, துறையூா் மணப்பாறை மற்றும் 16 பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சோ்ந்த பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.