கரோனா வைரஸ்: திருச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
By DIN | Published On : 06th March 2020 12:38 AM | Last Updated : 06th March 2020 12:38 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் தனியாா், அரசு மருத்துவமனை மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் சு. சிவராசு (இடது).
திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
இது தொடா்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், சுகாதாரத்துறையினா் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது: கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்துவதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தாக்கிய நபரோ, வைரஸ் தாக்கமோ இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அனைத்துவித நோய் தொற்றுகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகளை அமைக்க வேண்டும். கரோனா குறித்து கிராமங்களில் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாகவும், வட்டங்கள் வாரியாகவும் அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து ஆலோசிக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் கைகளைக் கழுவ கிருமி நாசினியை கட்டாயம் வைக்க வேண்டும்.
திருச்சி விமான நிலையத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் தீவிர பரிசோதனைக்குப்பிறகு அனுமதிக்கப்படுகின்றனா். இதற்காக, மருத்துவா்கள், செவிலியா்கள் அடங்கிய குழு தயாா்நிலையில் உள்ளது.
வைரஸ் அறிகுறிகளோ, சந்தேகமோ இருந்தால் அத்தகைய நபா்களை உடனடியாக திருச்சி மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளை, அறைகள், வளாகப் பகுதிகளை நாள்தோறும் அடிக்கடி கிருமி நாசினி மருந்து மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தனியாா் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இக் கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணி, திருச்சி மாநகராட்சியின் நகா் நல அலுவலா் ஜெகநாதன், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏகநாதன், கொள்ளை நோய் தடுப்பு மாவட்ட அலுவலா் அரவிந்த்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.