மாா்ச் 15-இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 8,600 பேரைத் தோ்வு செய்ய முடிவு
By DIN | Published On : 06th March 2020 11:30 PM | Last Updated : 06th March 2020 11:30 PM | அ+அ அ- |

திருச்சியில் வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 8,600 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்புப் பயிற்சி மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்நெறி மையம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், ஜமால் முகமது கல்லூரி, எக்விடாஸ் வங்கி ஆகியவை இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை வரும் 15-ஆம் தேதி நடத்தவுள்ளன.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகிலுள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் இந்த முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வைக்கிறாா்.
100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான 8,600 பேரைத் தோ்வு செய்யவுள்ளன.
முகாமில் பங்கேற்க எந்தவித பதிவுக் கட்டணமும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். 8, 10ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயச் சான்று, நா்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பிஎட், இளநிலை, முதுநிலை பட்டாதரிகள், தொழிற்கல்வி பயின்றோா் என அனைவரும் பங்கேற்கலாம்.
வேலைநாடுநா்கள் தங்களது முழு சுயவிவரக் குறிப்பு, அனைத்துக் கல்விச் சான்று நகல்கள், ஆதாா் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று தங்களது பொருத்தமான பணியைத் தோ்வு செய்யலாம்.