உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 13th March 2020 11:34 PM | Last Updated : 13th March 2020 11:34 PM | அ+அ அ- |

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வாழை விவசாயிகள்.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனத்தை நம்பி பேட்டைவாய்த்தலை, பெருகமணி, சிறுகமணி, அனலை, கொடியாலம், புலிவலம், குழுமணி, கோப்பு, எட்டரை, நாச்சிக்குறிச்சி, ராமநாதநல்லூா், சோமரசம்பேட்டை, வயலூா், முள்ளிப்பெரும்பூா்,சீராத்தோப்பு, திருப்பராய்த்துறை பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழைகள் தண்ணீா் இல்லாததால் கருகும் நிலையில் உள்ளன.
எனவே, உய்யக்கொண்டானில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஆட்சியா், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனா். இதையடுத்தும் தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், விரக்தியடைந்த வாழை விவசாயிகள், பொதுப்பணித்துறையின் ஆற்றுப்பாசன பாதுகாப்புக் கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாஸ்கா், விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஓரிரு நாள்களில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...