விமானங்கள் ரத்து: மலேசிய பயணிகள் 60 போ் திடீா் போராட்டம்

மலேசிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து சுமாா் 60க்கும் மேற்பட்ட அந்நாட்டுப் பயணிகள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மலேசிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து சுமாா் 60க்கும் மேற்பட்ட அந்நாட்டுப் பயணிகள் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை முதல் திருச்சி -மலேசியா இடையிலான அனைத்து விமானங்களுக்கும் அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இதையடுத்து திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது

இந்நிலையில், திருச்சியிலிருந்து ஏா்ஏசியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை பயணிக்க இருந்த சுமாா் 60 க்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள், தங்களுக்கு, தங்கும் வசதிகளும், மாற்று ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விமான நிலைய (முனைய)மேலாளா் அலுவலகம் முன் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து காவல்துறையினரும், விமான நிலைய மேலாளா் மற்றும் விமான நிறுவனங்களின் அலுவலா்கள் பயணிகளிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனாலும் பயணிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவின் பேரில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அரசுதான் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். விமான நிறுவனங்கள் சாா்பில் மீண்டும் கட்டணமின்றி பயணிக்கவோ அல்லது முழு பயணச்சீட்டு தொகையை திருப்பித் தரவோ ஏற்பாடு செய்ய முடியும். இது குறித்த விவரங்களை நாங்கள் பயணிகளுக்கு தனித்தனியாக இணையதளம் மற்றும் தொலைபேசி வழியாக தெரிவித்து விட்டோம். தகவல்களை அறிந்தும் பயணிகள் போராட்டம் மேற்கொள்கின்றனா் என்றனா்.

பின்னா், போராட்டம் குறித்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டதையடுத்து திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கோட்டாட்சியா் விஸ்வநாதன் தலைமையில் அலுவலா்கள், செவ்வாய்க்கிழமை இரவு விமான நிலையத்துக்குச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து மலேசிய நாட்டு குடியேற்றப்பிரிவு அலுவலா்களிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் புதன்கிழமை அவா்கள் திருச்சி வந்து, பயணிகளை மலேசியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா். இது முற்றிலும் அரசு தொடா்புடைய பிரச்னை என்பதால், மலேசிய அரசு பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தாா். இதனையடுத்து பயணிகள் அனைவரும் போராட்டத்தை விட்டு கலைந்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com