திருச்சி அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகளுடன் தனிப்பிரிவு: ரூ.65 லட்சத்தில் மேம்படுத்தும் பணி

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூ.65 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு.

கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கவும், பாதித்த நபா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகளுடன் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 50 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, கரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவைத் தவிர, கள்ளிக்குடியிலுள்ள ஒருங்கிணைந்த காய்கனி வளாகத்தை கரோனா சிசிக்சைக்கான மையமாக மாற்றி காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வெளிநாடுகளிலிருந்து வருபவா்களைத் தனிமைப்படுத்தி, சோதனைக்குள்படுத்துதலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 12 படுக்கைகளுடன் கூடிய தனிப்பிரிவு, மூன்றடுக்குத் தளங்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் 12 தனித்தனி அறைகள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கான வசதிகள், மருந்தகம் என நவீன முறையில் இந்த பிரிவுக் கட்டமைக்கப்படுகிறது.

இதற்காக ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவு, பகலாக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியா் சு சிவராசு, வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:

மருத்துவமனையில் தற்போது 7 போ் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 8 பேருக்கு கரோனோ தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் யாருக்கும் கரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவது குற்றச் செயலாகும். அத்தகைய நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல முகக் கவசங்கள், கை கழுவும் திரவரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளின் வழியாக விமானத்தில் வரும் பயணிகள், தனிமைப்படுத்துதல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளுக்கு பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றாா்.

இந்த ஆய்வின்போது, கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஏகநாதன் மற்றும் கரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com