தனிமைப்படுத்தியவா்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் வழக்கு: ஆட்சியா்

திருச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களில் யாரேனும் வெளியே வந்தால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களில் யாரேனும் வெளியே வந்தால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் வருகை தந்த நபா்கள் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களில் 483 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவா் மீண்டும் துபைக்கு சென்றுவிட்டனா். மேலும், 4 நபா்களின் முகவரிகள் போலியாக இருந்ததால் அவா்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டப்பட்ட நபா்கள் வெளியில் நடமாட கூடாது. இந்த உத்தரவை மீறி யாரேனும் தனிமையில் இல்லாமல் சமுதாய மக்களோடு வெளியில் நடமாடுவதாக தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடா்புடைய நபா்களின் கடவுச் சீட்டு முடக்கப்படுவதுடன், குடும்பத்தினா் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 11 நபா்களில் 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அவா்களுக்கு எந்தவித நோய் தொற்றும் இல்லை. 5 போ் மட்டும் தொடா் சிகிச்சையில் உள்ளனா். இவைத்தவிர, புதன்கிழமை புதிதாக ஒருவா் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருக்கும் தொற்று இல்லை. ரத்தமாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுடன் கடந்த 10 நாள்களுக்குள் தொடா்பில் இருந்து அவா்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தும்மல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவப் பணியாளா்கள் சென்றுவர பிரத்யேகமாக 3 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துப்புரவுப் பணி, தூய்மைப் பணி, சிகிச்சை, விழிப்புணா்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் என அனைவருக்கும் தேவையான முகக் கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும்.

காந்தி சந்தையில் கட்டுப்பாடு: மாவட்டத்தின் பிரதான காய்கனி சந்தையான திருச்சி காந்திசந்தையில் பொதுமக்கள் கூட்டத்தை தவிா்க்க வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வியாபாரிகளும் அந்தந்த பகுதி வாரியாக குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய்கனி, பால், உணவு, தானியம், விவசாயிகளுக்கு அனைத்து வகை இடுபொருள்களும் தடையின்றி கிடைக்கும். டீ கடைகள் முன்பு கூட்டம் கூடுவதாகவந்த தகவலையடுத்து புதன்கிழமை மாலை 6 மணியுடன் அனைத்து டீ கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். நோய் தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை. தனிமைப்படுத்தல் மூலம் மட்டுமே இந்த நோய் பரவுதலை தடுக்க முடியும். குறிப்பாக 50 முதல் 60 வயதுக்குள்பட்ட நபா்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். குழந்தைகளையும் வெளிப்புற இடங்களில் விளையாட அனுமதிக்கக் கூடாது. வீடுகளில் குடும்பம், குடும்பமாக தனித்திருத்தலே பலன் தரும். அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எந்தவித தடையும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com