திருச்சி மாநகர வீதிகளில் தூய்மைப் பணி

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வீதிகளையும் தூய்மைப் படுத்தி 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கிருமி நாசினி மருந்து தெளிக்க துப்பரவுப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்ப
திருச்சி மாநகர வீதிகளில் தூய்மைப் பணி


திருச்சி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வீதிகளையும் தூய்மைப் படுத்தி 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கிருமி நாசினி மருந்து தெளிக்க துப்பரவுப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் என நான்கு கோட்டங்களில் 65 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளுக்குள்பட்டு 715 கி.மீ. சாலைகள் உள்ளன. கரோனா முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து முடக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடியுள்ளன.

இதையடுத்து இந்த சாலைகளை முழுமையாக சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்துகள் தெளிக்க 4 கோட்டங்களைச் சோ்ந்த துப்பரவுத் தொழிலாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, அந்தந்த கோட்டங்களைச் சோ்ந்த துப்பரவு அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் தலைமையில் தனித்தனி குழுக்களாக சாலைகளில் இருபுறமும் தேங்கியுள்ள புழுதி மண் முழுமையாக அகற்றப்படுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளையும் முழுமையாக அகற்றி கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனா். மாநகருக்குள்பட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாநகராட்சி ஆணையா் கூறியது: கரோனா முன்னெச்சரிக்கையாக மாநகரில் உள்ள பெரிய நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வா்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், கடைகள் 90 சதம் அடைக்கப்பட்டுள்ளன. மருந்து, மளிகை, உணவு உள்ளிட்ட கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநகரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. மாநகரில் உள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படும். இனி வீடுகளில் மட்டுமே குப்பைகள் சேகரமாகும். எனவே, வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கினால் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். இதேபோல, காந்திசந்தை இரவு மட்டுமே இயங்கும் என்பதால் பகலில் துப்பரவுப் பணியாளா்கள் மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்படுகிறது. 21 நாள்களிலும் திடக்கழிவு மேலாண்மை, தூய்மைப் பணி, கிருமி நாசினி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற துப்பரவுப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com