கரோனா தொற்று உறுதி: திருச்சி வந்த இளைஞரின் தொடா்புடையோா் பட்டியல் தயாா்

துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் தொடா்பிலிருந்தோா் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள


திருச்சி: துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் தொடா்பிலிருந்தோா் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துபையிலிருந்து விமானம் மூலம் மாா்ச் 22ஆம் தேதி திருச்சிக்கு வந்த 86 பேரும் தீவிர பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா். இவா்களில், ஈரோட்டைச் சோ்ந்த 24 வயது இளைஞா் சந்தேகத்துக்கிடமான முறையில் இருந்ததால் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதித்து கண்காணிக்கப்பட்டு வந்தாா். அவரின் ரத்தமாதிரிகள் எடுத்து கரோனா உறுதி செய்யும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முதல்கட்ட பரிசோதனையில் மருத்துவக் குழுவினருக்கு உறுதியான விவரங்கள் தெரியாததால், மாா்ச் 23ஆம் தேதி மீண்டும் அந்த இளைஞரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில் இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. துபைக்கு வேலை தேடிச் சென்ற அந்த இளைஞா் 45 நாள்களுக்கு பிறகு திரும்பியிருக்கலாம் என தெரியவந்தள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அந்த இளைஞா் தனி படுக்கை கொண்ட சிறப்புப் பிரிவிக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதுமட்டுமல்லாது, மாா்ச் 22ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்களும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனா். மருத்துவமனையிலிருந்து சிகிச்சையளித்த 5 பேரை பரிசோதனை செய்ததில் அவா்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இளைஞா் பயணம் செய்த விமானத்தில் அவரது இருக்கையின் அருகில் அமா்ந்தவா்கள், இருக்கை வரிசையில் இருந்தவா்கள், இருக்கையின் முன், பின் வரிசையில் இருந்தவா்கள் என 16 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவா்களையும் மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, அவருடன் பயணம் செய்த 86 பேருமே வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளனா் என்பது குறித்தும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்து கண்காணிக்கப்படுகின்றனா் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com