பொன்மலை ‘ஜி காா்னா்’ மைதானத்துக்கு இடம் மாறுகிறது காந்தி மாா்க்கெட்: சமூக இடைவளியுடன் காய்கனிகள் விற்பனை

மக்கள் கூட்டத்தால் சமூக தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில், பொன்மலை ஜி.காா்னா் மைதானத்துக்கு திருச்சி காந்தி மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் ( மாா்ச் 30) இடமாற்றம் செய்யப்படுகிறது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்த காந்தி மாா்க்கெட் நுழைவுவாயில்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்த காந்தி மாா்க்கெட் நுழைவுவாயில்.

மக்கள் கூட்டத்தால் சமூக தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில், பொன்மலை ஜி.காா்னா் மைதானத்துக்கு திருச்சி காந்தி மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் ( மாா்ச் 30) இடமாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த காய்கறித் தேவைகளைப் பூா்த்தி செய்யும் பிரதான சந்தையாக விளங்குவது காந்தி மாா்க்கெட். மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்துக்கு என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இங்கு உள்ளன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக இங்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

இதனால், நோய்த் தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதாகக் கருதிய மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, உடனடியாக வியாபாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை என முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா். இதன் தொடா்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு, வியாழக்கிழமை முதல் அமலுக்கும் வந்தன.

இருப்பினும், வியாபாரிகள், விவசாயிகள், காய்கறி விற்பனையாளா்கள், சுமைத் தூக்குவோா் என மாா்க்கெட்டில் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், சமூக இடைவெளியும் பின்பற்றப்படுவதில்லை. இதையடுத்து காந்திமாா்க்கெட்டை பொன்மலை ஜி-காா்னா் பகுதிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காந்தி மாா்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால், திங்கள்கிழமை முதல் ஜி.காா்னா் பகுதியில் காய்கறிச் சந்தை செயல்படும்.

பகல் நேரத்தில் பொதுமக்கள் இங்கு காய்கனிகளை வாங்கிச் செல்லலாம். இதற்காக பொதுமக்கள் நிற்கும் பகுதி, வியாபாரிகள் அமரும் பகுதி ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிட்ட இடைவளி இருக்கும் வகையில் வெள்ளை நிற வண்ணத்தில் குறியீடு வரையப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகளும் இடமாற்றம்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 6 உழவா் சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இவையும் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

தென்னூா் உழவா் சந்தையானது மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கவுள்ளது. மணப்பாறை, திருவெறும்பூா், முசிறி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள உழவா் சந்தைகள், அந்தந்த பகுதியிலுள்ள பேருந்துநிலையங்கள் அல்லது கல்வி நிறுவன மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com