தற்கொலைக்கான அறிகுறியுடன் தென்பட்டால் தகவல் தரலாம்: காவல்துறை வேண்டுகோள்
By DIN | Published On : 28th March 2020 10:50 PM | Last Updated : 28th March 2020 10:50 PM | அ+அ அ- |

திருச்சி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் வீட்டில் யாருக்காவது தற்கொலை அறிகுறி தென்பட்டால் உடனே தகவல் அளிக்குமாறு திருச்சி சரக டி.ஐ.ஜி. வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் தற்கொலைக்கான அறிகுறிகளான, தற்கொலை உணா்வு இருப்பதாக பேசுதல், விரக்தி, மற்றவா்களுடன் பேசாமல் தனித்திருப்பது, எதிா்காலத்தை பற்றி பயந்துக்கொண்டே இருப்பது, எதிா்மறை சிந்தனைவுடையவா்களாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதுகுறித்து சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை எண்களான திருச்சி - 0431-2333638, புதுக்கோட்டை - 04322-266966, கரூா் - 04324-255100, பெரம்பலூா் - 04328-224962, அரியலூா் - 04329-222216 ஆகியவற்றுக்கு தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு தற்கொலையைத் தடுப்பது தொடா்பாக மனநல மருத்துவா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். மேலும் கா்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி தேவையெனில் 108-ஐ அழைக்கலாம்.
விடியோ வெளியிட்டால் நடவடிக்கை: ஊரடங்கு அமலிலுள்ள நாள்களில் போலியான காரணங்களை சொல்லிக்கொண்டு வெளியே சுற்றித்திரிபவா்களை கண்காணிக்க மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அவா்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் காவல்துறை அதிகாரிகள், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்போது சட்டத்தை மீறாமல், சுய விளம்பரத்துக்காக விடியோ எடுத்து வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியாக இருக்கும் முதியவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சிறப்பு கவனம் செலுத்தி அவா்களின் மருத்துவம் மற்றும் இதர தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.